staline speech
விவசாயத்தைக் காக்கவே முழு அடைப்பு போராட்டம்…தேர்தல் கூட்டணிக்காக அல்ல….மு.க.ஸ்டாலின் ஆவேசம்…
தமிழகத்தில் செத்து மடிந்து கொண்டிருக்கும் விவசாயிகளை காப்பாற்ற நாளை மறுநாள் நடைபெறவிள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒட்டு மொத்த தமிழினமும் ஆதரவு தர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
டெல்லியில் கடந்த 40 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக. தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன் ஒரு கட்டமாக அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கும் வகையில்,சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர்.
மு.க.ஸ்டாலின் பேசும்போது , தமிழகத்தில் விவசாயிகள் மண்டல வாரியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் காவிரி டெல்டா பகுதியும், பவானி ஆற்றின் குறுக்கே பாம்பாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சியால் கொங்கு மண்டலம் பகுதியும், பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் வடக்கு மண்டலம் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக பட்டியலிட்டார்.
விவசாயிகள் என்பது ஒரு புறமிருக்க, தமிழகத்தின் நதி நீர் உரிமைகளை பேச்சுவார்த்தை மூலம் பெற முடியாத அதிமுக அரசால் இன்றைக்கு தமிழகமே குடிநீர் பஞ்சத்தில் சிக்கித் தவிப்பதாக கூறினார்.
ஓ.பி.எஸ் போய் இ.பி.எஸ். வந்தார். ஓ.பி.எஸ் அறிவித்த நிவாரணங்களை விவசாயிகளுக்கு அளிப்பதாக அறிவித்தார். அந்த அறிவிப்பும் அனைத்து விவசாயிகளுக்கும் இல்லை.
ஆனால் அவரும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியைக் கூட வழங்கவில்லை. மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

பதவியை தக்க வைத்துக் கொள்ள, பாஜகவிற்கு ஜால்ரா அடிக்க மட்டுமே அவர்கள் தயாராக இருக்கிறார்கள். என்றும் தமிழக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியவர்கள் இன்றைக்கு டெல்லியில் மோடி அரசிடம் ஊழல்களில் இருந்தும், வருமான வரித்துறை ரெய்டுகளில் இருந்தும் தப்பிக்க மண்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
செத்து மடிந்து கொண்டிருக்கின்ற விவசாயத்தை பாதுகாக்க, அனைவரும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்ட ஸ்டாலின், இந்த கூட்டணி தேர்தலுக்கானது அல்ல என உறுதிபடத் தெரிவித்தார்.
