stalin written to report about professor officials commission

தேர்வு வாரிய ஊழலால், வேலை இல்லா இளைஞர்களிடம் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் 16 ஆம் நாளன்று நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மதிப்பெண் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருப்பது அதிமுக ஆட்சியில் பணியாளர் நியமனங்களில் ஊழல் மலிந்து இருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது என தெரிவித்துள்ளார். 

விடைத்தாள்களில் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு இருக்கின்ற மிகப்பெரிய மோசடி, ஏதோ ஒருசில ஊழியர்கள் மட்டத்தில் மட்டுமே நடைபெற்று விட்டது என்று சொல்வது நம்பக்கூடியதாக இல்லை எனவும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஊழல் சந்தி சிரித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

லஞ்சம் கொடுத்து விரிவுரையாளர் பதவி பெற முயன்ற, இந்த மிகப்பெரிய ஊழல் வழக்கினை, சி.பி.சி.ஐ.டி. பிரிவு விசாரணைக்கோ அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கோ கடைசிவரை மாற்றவில்லை எனவும் மாபெரும் மதிப்பெண் ஊழலுக்குத் துணை போன உயரதிகாரிகளையோ, அதில் சம்பந்தப்பட்ட முக்கிய நிறுவனங்களையோ அல்லது ஆளுங்கட்சியினரையோ தொடவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 

முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களின் தேர்வை ரத்து செய்வதை தவிர்த்துவிட்டு, நேர்மையாக தேர்வு எழுதியவர்களின் முடிவையும் ரத்து செய்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளே கிடைக்காத இந்தச் சூழ்நிலையில், நேர்மையாக தேர்வெழுதி விட்டு, காத்திருந்த இளைஞர்களின் கனவுகள், தேர்வு ரத்து செய்யப்படுவதன் மூலமாக ஒட்டுமொத்தமாக கலைக்கப்படுவது மிகவும் கொடுமையானது என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்து பணியாளர் தேர்வு ஆணையங்கள் மற்றும் வாரியங்களிலும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி விடும் ஆபத்து இருப்பதாகவும் 

ஆகவே, ஒட்டுமொத்தமாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கான தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக, முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் நியமனங்களை மட்டும் ரத்து செய்துவிட்டு, நேர்மையாக தேர்வு எழுதியவர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற அதிமுக அரசு முன் வரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.