Stalin will become cm of tamilnadu i wiill stand with him - Vaiko praise
திருவாரூர்
செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கபலமாக என்றைக்கும் இருப்பேன். தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் அவர் முதல்வராக அமருவார் என்று வைகோ கூறினார்.
திருவாரூரில் மதிமுக தலைவர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "இன்று இந்தியா காவி மயம் ஆகிக்கொண்டு இருக்கிறது. நிச்சயமாக நான் சொல்கிறேன். காவி இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் களம் காணுவோம். இந்தியாவை காவி மயமாக்குகிற மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுகிற முயற்சியில் நாம் இணைந்து செயல்படுவோம்.
எடுபிடி அரசு தமிழகத்தில் செயல்படுகிறது. தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்றார்கள். அதேபோல மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு போராட்டம் வரும்போது துப்பாக்கியை ஆட்சியாளர்கள் நீட்ட மாட்டார்கள் என்பது என்ன உத்தரவாதம்?.
எனவே, இந்த ஆட்சிக்கு முடிவு கட்டாவிட்டால் இந்த பகுதி ரசாயன மண்டலம் ஆகிவிடும். எனவே, மு.க.ஸ்டாலின் தொடங்கிய இந்த எழுச்சி பயணத்திற்கு நாம் கரம் கோர்த்து செயல்படுவோம்.
தமிழகத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. தமிழகத்தை சாதிய சக்திகள் ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கிறது. எனவே காவி இல்லாத இந்தியா, சாதி இல்லாத தமிழகத்தை உருவாக்க, ஸ்டாலின் தலைமையில் எல்லோரும் இணைந்து பணியாற்றுவோம்.
கருணாநிதி தி.மு.க.வை கட்டிக்காத்து வளர்த்தார். அவருடைய அரசியல் ஆக்கம், முடிவுகள், அடக்கு முறைகளை எதிர்த்தது. தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியனும், வள்ளுவனும் தந்ததைப்போல காலத்தால் அழியாத காவியத்தை தந்து இருக்கிறார்.
வாழ்நாள் முழுவதும் எத்தனையோ சோதனைகள் வந்தாலும் சிரித்துக்கொண்டே சிந்தையில் ஏற்றுக்கொண்டவர். 29 ஆண்டுகாலம் கருணாநிதியின் நிழலில் இருந்தவன் நான். செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கபலமாக என்றைக்கும் இருப்பேன்.
13 பேரை நரபலிபோல வேட்டையாடியது தமிழக அரசு. இந்த அரசின் கரங்கள் ரத்தம் படிந்த கரங்கள். இதனை நடத்துவது எடப்பாடி அரசு. அவரை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.கூடாரம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 120 முதல் 145 இடங்களுக்கு மேல் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற முடியாது. அதற்கு கருணாநிதியைபோல ஸ்டாலின், காய்களை நகர்த்துவார்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் ஸ்டாலின் தலைமை தாங்குகிற அணி தான் ஜெயிக்கும். இந்திய அரசு யார் கையில் என்பதை தீர்மானிக்கும் வகையில் தென்னகத்தின் பிரதிநிதியாக ஸ்டாலின் அங்கு இருப்பார்.
எடப்பாடி அரசு சட்டத்தை ஏவுகிறது. துப்பாக்கியை நீட்டுகிறது. திராவிட இயக்கத்தை ஒழித்து விடலாம் என பகல் கனவு காண்கிறார்கள். அது நடக்காது. திராவிட இயக்கத்தை அழிக்க நினைக்கிற அனைவருக்கும் கூறுகிறேன்.
எந்த அடக்கு முறைக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். சூழ்ச்சி வலைகளை கிழித்து எறிவோம். திராவிட இயக்கத்தை காப்போம். பெரியார், அண்ணா லட்சியங்களை காப்போம்.
தமிழகத்தை சூழ்ந்து வரும் ஆபத்துகளை தூக்கி எறிவோம். தமிழகத்தில் முதலமைச்சர் நாற்காலிக்கு ஸ்டாலினுக்கு நிகராக எவரும் இல்லை. ஆட்சி பீடத்தில் அவர் அமர்வார். அதை கண்டு நாங்கள் மகிழ்வோம்.
திராவிட இயக்கம் ஆயிரங்காலத்து பயிராக இருக்கும். கருணாநிதி 100 ஆண்டுகாலம் கடந்து 120 ஆண்டு காலம் வாழ்வார். அன்றும் அவரை வாழ்த்தும் அகவையை பேராசிரியருக்கு கொடுக்கட்டும்.
மத்தியில் உள்ள மதவாத அரசு தூக்கி எறியப்பட வேண்டும். பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு அகற்றப்பட வேண்டும். இது ஏழைகளுக்கான அரசு அல்ல. கோடீஸ்வரர்களுக்கான அரசு. தமிழகத்தில் உள்ள அரசு பா.ஜ.க. பினாமி அரசு. ஊழல் அரசு. இப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.
தமிழகம் மற்றும் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம், காட்சி மாற்றத்துக்கு கதாநாயகனாக ஸ்டாலின் திகழ வேண்டும். மத்தியில் நடைபெறும் ஆட்சி, காட்சி மாற்றத்துக்கு கதாநாயகனாக ராகுல்காந்தி திகழ வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம்.
திராவிடத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. பெரியார் மண் என்ற இந்த மண்ணுக்கு சிறப்பு என்றால் பெரியார், அண்ணா, திராவிட இயக்கத்தால் தளபதி போன்றவர்களால், முன்பைவிட தற்போது தேவை, ஆபத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
அதுபோல இன்னொரு ஆபத்து குருகுலக்கல்வி. இதையெல்லாம் போக்க வேண்டுமானால் இப்போது மத்தியில் இருக்கிற மோடி ஆட்சி, அந்த காவி ஆட்சியை அகற்றியாக வேண்டும். இந்த விழாவில் இருந்து திரும்பி போகும் வேளையில் அந்த உறுதியோடு நீங்கள் செல்ல வேண்டும்.
காட்சியாக இருக்கிற ஆட்சியை வெளியே அனுப்ப வேண்டும். மத்தியில் காவி ஆட்சி. இங்கு ஆவி ஆட்சி. இந்த ஆட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு சூளுரை ஏற்க வேண்டிய நாள் கருணாநிதி பிறந்த நாள் விழா.
சட்டசபையில் சிறப்பாக பணியாற்றக்கூடிய இயக்கம் தி.மு.க. ஸ்டாலின் நாளை முதல் சட்டசபைக்கு செல்ல வேண்டும். அவர்கள் வேண்டுமானால் தூக்கி போடட்டும். அதைப்பற்றி கவலைப்படக்கூடாது.
தமிழக ஆட்சி தான் வெளியே தூக்கி எறியப்பட வேண்டும். அப்போது தான் திராவிடம் சமூக விடுதலை பெற முடியும். தெளிவான போராட்ட களத்துக்கு செல்வோம்" என்று அவர் பேசினார்.
