ஸ்டாலின் முதல்வராக வேண்டும்! என்று தி.மு.க.வினர் ஆசைப்படுகின்றனர். ஆனால் அவரது மனைவி துர்காவோ, வெறியாக இருக்கிறார். கணவரின் அரசியல் வெற்றிக்காக அவர் வேண்டாத தெய்வங்களில்லை, ஏறி இறங்காத கோயில்கள் இல்லை, பண்ணாத பரிகாரங்கள் இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் துர்கா செய்திருக்கும் காரியம்தான் தி.மு.க.வினர் மட்டுமில்லாமல் டோட்டல் அரசியலரங்கையும் அதிர வைத்துள்ளது.

 பகுத்தறிவு! எனும் சித்தாந்தத்தின் அடிப்படையில் ‘கடவுள் மறுப்பு கொள்கை’யை மிக மிக வலுவாக பேசக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். அதிலும் இந்து சமயத்தைத்தான் அதிகம் உரசிப்பார்ப்பார்கள் எனும் விமர்சனம் உண்டு.  கருணாநிதி மிக கடுமையாக இந்துக்களின் மத சடங்குகளையும் எதிர்த்தார். ஸ்டாலினும் தந்தையின் அடியொற்றிதான் நடக்கிறார். அதனால்தான் சமீபத்தில் கூட தான் கலந்து கொண்ட ஒரு இஸ்லாமிய திருமணத்தில் பேசுகையில் ’இந்துக்களின் திருமணங்களில் புரோஹிதர் ஓதும் மந்திரங்களின் அர்த்தம் விளங்குவதில்லை.’ எனும் ரீதியில் பேசி, பெரும் பிரளயத்தை கிளப்பி, எதிர்ப்பையும் வாங்கிக் கட்டினார். 

ஸ்டாலின் இப்படி இருக்க, அவரது மனைவி துர்காவோ நேர் எதிர். ஆலயங்களை தேடித் தேடி சென்று வணங்கிக் கொண்டிருக்கிறார். அத்திவரதரை தரிசிக்க அவர் வி.வி.ஐ.பி. பாஸில் சென்று நின்றதெல்லாம் பெரும் விமர்சனங்களுக்கு ஆளாகிய விஷயங்கள். சமீபத்தில் கூட திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வணங்கினார், அவர் மீது சாத்தப்பட்ட அங்கவஸ்திரத்தை பிரசாதமாக பெற்றார். இது எல்லாமே கணவர் ஸ்டாலினின் அரசியல் எழுச்சிக்காகத்தான்! என்று விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில், திருப்பதிக்கு செல்லும் முன்பாக துர்கா செய்த காரியம்தான் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது துர்கா ஸ்டாலினுக்கு நீண்ட கூந்தல் உண்டு. 

பேரன் பேத்திகள் எடுத்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் கூட ஏதோ இளம் பெண் போல் மிக நளினமாக கூந்தலைப் பின்னிப் போட்டுக் கொண்டு விழாக்களிலும், கோயில்களிலும் வலம் வருவார். இந்த நிலையில் கடந்த வாரம் திருப்பதி செல்லும் முன்பாக தன் நீண்ட தலை முடியில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதத்துக்கு அதிகமான நீளத்தை ‘கட்’ பண்ணி தானமாக வழங்கியிருக்கிறார். ஏன் இந்த திடீர் ரிஸ்க்? என்று கேள்விகள் எழ.....’ஸ்டாலினின் அரசியல் வெற்றிக்காகத்தான் இப்படியான ஒரு வேண்டுதலை, காணிக்கையை நிறைவேற்றியிருக்கிறார் துர்கா. திருப்பதியில் சென்று முடி காணிக்கை செய்தால் அது பெரியளவில் ஸீன் ஆகிவிடும்! நாத்திகம் பேசும் ஸ்டாலினுக்கு அது பெரியளவில் அரசியல் இடைஞ்சலை தரும்! என்பதால் சென்னையிலேயே இப்படி ‘பூ முடி’ கட் செய்துவிட்டார். 

இதுவும் பகுத்தறிவுக்கு எதிரானதுதான்.’ என்று போட்டுத் தாக்கினர் விமர்சகர்கள். ஆனால் இந்த விவகாரம் பற்றி ஓப்பனாய் இப்போது குமுதம் சிநேகிதி பெண்கள் பத்திரிக்கையில் எழுதியிருக்கும் துர்காவோ “என்னோட நீளமான முடியில் கணிசமான நீளத்தை புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தானமாக வழங்கியிருக்கேன். கேன்சரால் பாதிக்கப்பட்டவங்க கீமோதெரெபி ட்ரீட்மெண்ட் எடுக்குறப்ப, முடி உதிர்ந்து போயிடும். இவங்க வெளியில் வர்றப்ப ‘விக்’ வெச்சுக்க ஆசைப்படுவாங்க. அதற்காக இயற்கையான கூந்தலை தானமா வழங்குற நல்ல பழக்கத்தை சில பெண்கள் பண்றாங்க. அதைத்தான் நான் பண்ணியிருக்கேன். ஏற்கனவே என்னோட 50வது பிறந்த நாளில் என்னோட உடலுறுப்புகளை தானம் செய்திருக்கேன். 

எங்க வீட்டுக்காரர் பிறந்தநாளில் ரத்ததானமும் பண்ணியிருக்கேன். அந்த வகையில், இந்த தடவை தலைமுடியை தானம் பண்ணிட தோணுச்சு. செஞ்சுட்டேன். சென்னையில, இங்கே பக்கத்திலேயே இருக்குற ஒரு பார்லரில் முடியை வெட்டி, புற்று நோய்  பெண்களுக்காக கொடுத்துட்டு....அப்புறமா திருப்பதிக்கு கிளம்பினேன். எனக்கு ரொம்ப நிறைவான, ஆத்மார்த்தமான தானமாக இது இருக்குது.” என்றிருக்கிறார் நெகிழ்ச்சியில் கண்கள் பனிக்க. துர்காவின் கூந்தல் வெட்டப்பட்டதற்கு மற்றவர்கள் அரசியல் காரணம் சொல்லிக் கொண்டிருக்க, அவரோ ஒரு ஆத்மார்த்தமான விஷயத்தை காரணமாக சொல்லியிருக்கிறார். நெகிழ்ச்சி!