stalin went to peria pandi house and said comfort

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் குடும்பத்தினருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பான இரண்டுபேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ், சௌத்ரி ஆகியோர் பாலி மாவட்டம் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். உடன் சென்ற போலீஸாரும் காயம் அடைந்தனர்

இந்நிலையில் பெரியபாண்டியின் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பெரியபாண்டி குடும்பத்தினரை நேரில் சந்தித்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியை காவல் துறை இழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

கொள்ளைக் கும்பலை பிடிக்க ராஜஸ்தானுக்கு ஐ.ஜி தலைமையில் தனிப்படை சென்றிருந்தால் இந்த சோக நிகழ்வு நடந்திருக்காது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.