காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு செய்யும் பச்சை துரோகம் தொடருமானால், மாபெரும் போராட்டக் களம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதிநீர் உரிமையில் தமிழ்நாட்டை திட்டமிட்டு மீண்டும் மீண்டும் கடுமையாக வஞ்சித்து வரும் மத்திய அரசு, மேலாண்மை வாரியம் அமைக்க கிஞ்சிற்றும் மனமின்றி, ஸ்கீம் என்றால் என்ன என அர்த்தம் கேட்டு காலதாமதம் செய்ததுடன், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இன்று வரைவு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டி, பிரதமரும் அமைச்சர்களும் அம்மாநிலத்தில் பிரச்சாரத்தில் இருப்பதால், வரைவு அறிக்கை தொடர்பாக ஒப்புதல் பெற முடியவில்லை என நீதிமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்.

தகவல் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்துள்ள நிலையில் மின்னஞ்சல் மூலமாகவோ வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியோ ஒரு ஒப்புதலை கூட பெற முடியாத நிலையில் நொண்டிச் சாக்கை மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்திருப்பது தமிழகத்தை ஏமாற்றும் துரோகச் செயலின் தொடர்ச்சி தானே தவிர வேறில்லை. இதற்காக மத்திய அரசை கடுமையாக கண்டித்து இன்று மாலையே வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.

தேர்தல் லாபத்திற்காக மத்திய அரசு தமிழர்களை வஞ்சிக்கிறது என்பதை அதன் தலைமை வழக்கறிஞரே பதிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு எவ்வித மான உணர்ச்சியுமின்றி ஏனோதானோவெனச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசு மீது தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் நிலை என்ன என்பது கூட தெரியாதபடி, மாநில அரசின் சட்டத்துறையும் அதன் வழக்கறிஞர்களும் பெயரளவுக்கு செயல்படும் திறனற்ற போக்கு நிலவுகிறது.

டெல்லி வரை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரம் குறித்து பிரதமரை தனியே சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இழைத்துள்ள அவமானமாகும். அந்த அவமானத்தைத் துடைத்தெறிவதற்கான முயற்சி அதிமுக ஆட்சியாளர்களிடம் தென்படவே இல்லை.

தமிழகத்திற்கு இந்த மாத நீர் அளவாக 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவை மதித்து, கர்நாடக அரசு உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு போல தேர்தல் காரணங்களுக்காக நீதிமன்ற உத்தரவுகளை இழுத்தடிக்கும் செயலை அண்டை மாநிலமான கர்நாடகத்தை ஆளும் அரசு தவிர்க்கும் என எதிர்பார்க்கிறேன்.

காவிரியில் தமிழகத்திற்கு தொடர்ந்து நடைபெற்றுவரும் துரோகங்களுக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் உறுதியானநடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியமாகும். வார்த்தைகளில் கண்டிப்பு காட்டிவிட்டு, கால அவகாசத்தை நீட்டித்துக் கொண்டேபோவதென்பது தமிழகத்திற்கான நீதியை சிறிது சிறிதாக மழுங்கச் செய்வதாகவே அமைந்துவிடும்.வழக்கு விசாரணை மே 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமாவது தமிழகத்தின் நலனையும் உரிமையையும் கருத்திற்கொண்டு உச்சநீதிமன்றம்தீர்ப்பளிக்கும் என்ற கடைசி நம்பிக்கை மட்டுமே மிஞ்சியுள்ளது.

மேலும் மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு செய்யும் பச்சை துரோகம்தொடருமானால், மாபெரும் போராட்டக் களம் அமைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று தோன்றுகிறது. காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டும் வரை போராட்டம் தொடரும். எல்லா பிரச்சினைகளிலும் மக்கள் சக்தியைத் திரட்டி ஒற்றுமையோடு தொடர்ந்து போராடுவது தானே தீர்வு காண வரலாறு காட்டும் வழி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.