திமுகவினரால் தூர்வாரப்பட்ட சர்ச்சைக்குரிய கட்சராயன் ஏரியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். 

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி எருமைப்பட்டியில் உள்ள கட்சராயன் ஏரியை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி அங்குள்ள தி.மு.க.வினர்  தூர் வாரி செம்மைபடுத்தி இருந்தனர்.

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தொகுதியில் உள்ள ஏரியை எப்படி எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தூர் வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடலாம் என்று அ.தி.மு.க. சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அதுமட்டுமல்ல ஏரி கரைகளை உடைத்து அங்கிருந்த வண்டல் மண்ணை டிராக்டரில் இரவோடு இரவாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் அங்கு பதட்டமான நிலை நிலவியது. பின்னர் ஏரியை பார்வையிட சென்ற மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, திமுகவினர் சீரமைத்த ஏரியை ஸ்டாலின் பார்க்க அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, ஸ்டாலினை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட்டார். ஏரியை ஸ்டாலின்  பார்க்கக்கூடாது என்று அரசு சொல்வது சட்ட விரோதம் என்று நீதிபதி குற்றம் சாட்டினார். மேலும் ஸ்டாலின் 25 பேருடன் சென்று கட்சிராயன் ஏரியை பார்வையிட அனுமதி அளித்தார்.

இந்நிலையில், திமுகவினரால் தூர்வாரப்பட்ட சர்ச்சைக்குரிய கட்சராயன் ஏரியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.