ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர்  உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2020 ஆம்  ஆண்டின்  முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கவர்னர் விளக்கம் அளித்தார். அப்போது கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து  எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன், தமிமுன் அன்சாரி ஆகியோரும் கவர்னர் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் ஆளுநர் உரை குறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “ஆளுநர் உரையின் 56பக்கத்தையும் திருப்பிப் பார்த்தேன். சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை,  எடப்பாடி பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை ஆளுநர் வாசித்திருக்கிறார். 

இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை. நல்ல நகைச்சுவை உரை. பேரவையையும் நாடக மேடை ஆக்குவதை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.