stalin trying to break ops and eps friendship
மூன் டி.வி. அலுவலகத்திற்கு சென்று, தலைக்கு மேலே உட்கார்ந்திருக்கும் கேமரா கத்தியை பற்றி தெரியாமல் முழங்கி முடித்தார் எம்.எல்.ஏ. சரவணன்.
இப்போது அந்த வீடியோ ஃபுட்டேஜ்கள் தமிழக சட்டசபையை அந்தலிசிந்தலியாக்கிக் கொண்டிருக்கின்றன. சரவணனின் ஒப்புதல் வாக்குமூலம் தங்களை விட பன்னீர் அணியைத்தான் வெகுவாக பதம் பார்க்கிறது என்பதால் எடப்பாடி அண்ட்கோ செம்ம குஷி.
இந்த வீடியோ விவகாரத்தை எதிர்கட்சிகள் விவாதமாக்க விடாமல் அத்தனை ஆயுதங்களையும் பிரயோகித்து முடக்குகிறது அரசு. இது பன்னீர் அணிக்கு லாபமென்பதால் எடப்பாடி அணிக்கு ஆதரவாக நன்றி அலையை வீச ஆரம்பித்திருக்கிறது அவ்வணி.

இதை ஸ்டாலின் டீம் மிக துல்லியமாக ஸ்மெல் செய்துவிட்டது. பன்னீர் மற்றும் எடப்பாடி அணிகள் இணைந்து நெருங்கி வருவதை உடைக்க திட்டமிட்டவர்கள் சட்டமன்றத்தினுள் செம்ம பாலிடிக்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
எடப்பாடி அணி மற்றும் பன்னீர் அணி இரண்டு பேருக்குள்ளும் சண்டை மூளுமளவுக்கான தந்திரங்களை செய்ய வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் முக்கிய எம்.எல்.ஏ.க்களுக்கு அதன் தலைமை இட்டிருக்கும் கட்டளை.
அதன்படி எ.வ.வேலு நேற்று ‘தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சிறப்பு பொது வினியோக திட்டத்தை அமல்செய்தார். அந்த திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை நீட்டிக்க வேண்டும்.
ஆனால் கடந்த 2016 டிசம்பர் இறுதியில் முடிந்த அந்த திட்டத்தை உடனே நீட்டிக்காமல் மூன்று மாதங்கள் கழித்து நீட்டிப்பு செய்துள்ளனர். இதனால் பருப்பு கொள்முதல் செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக தமிழகம் முழுக்க மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இந்த விவகாரம் தளபதி ஸ்டாலின் அவர்களின் கவனத்துக்கு வந்ததும், கடைகளில் ஆய்வு செய்தார்.
பருப்பு கொள்முதல் செய்யாததை கண்டித்து போராட்டம் நடத்திய பிறகே இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.” என்று பட்டாசை பற்ற வைத்தார்.
ஆனால் இதை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மறுத்து, மத்திய அரசு இந்த திட்டத்துக்கான நிதியை நிறுத்திய போதும் மாநில அரசின் நிதியில் இது தொடர்வதாகவும், மார்ச் 2_ல் முதல்வர் உத்தரவிட்டு டெண்டர் வெளியான பின்னே மார்ச் 7_ம் தேதிதான் ஸ்டாலின் போராட்டத்தை அறிவித்தார் என்று போட்டுத்தாக்கினார்.
உடனே துரைமுருகன் குறுக்கிட்டு ‘அப்போது பன்னீர் செல்வம் அரசு இருந்தது.’ என்று உசுப்பினார். அதற்கு சற்றே கடுப்புடன் காமராஜ் ‘அப்போது அ.தி.மு.க. ஆட்சி இருந்தது.’ என்று திருத்தினார்.
இந்த நேரத்தில் தலையிட்ட ஸ்டாலின் “அப்போது பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். அவர் கோப்பில் கையெழுத்து போடாமல் இருந்துவிட்டதாக நீங்கள் கூறினீர்களா இல்லையா?” என்று நச்சென மடக்க, காமராஜோ பொத்தாம் பொதுவாக ‘அ.தி.மு.க. ஆட்சியில் எல்லாம் வெளிப்படையாக உள்ளது.” என்று சொல்லி உட்கார்ந்தார்.

உடனே மீண்டும் துவங்கிய எ.வ.வேலு “முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் கோப்பில் கையெழுத்து போடாததால் சிறப்பு பொது வினியோக திட்டத்தை நீட்டிப்பதில் இரண்டு மாதம் தாமதம் ஏற்பட்டதாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நீங்கள் பேட்டி கொடுத்தீர்கள்.” என்று ஆணித்தரமாக, அதாரப்பூர்வமாக மடக்கினார்.
காமராஜ் ஙே! என்று முழித்தார். இந்நிலையில் பரிதாபமாக எழுந்த பன்னீர்செல்வம், “நான் முதல்வராக இருந்த போது என்னிடம் வந்த கோப்புகள், மூன்று நாட்களுக்கு மேல் நின்றதில்லை. நான் கையெழுத்து போடாததால் எதுவும் நின்றது கிடையாது.” என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தார்.
ஒரு வழியாக பன்னீர் அணியும், எடப்பாடி அணியும் ஒரே நேர்க்கோட்டில் வந்த நிலையில் மிக சாதுர்யமாக ஒரு குண்டு வைத்து களேபரப்படுத்தியிருக்கிறது ஸ்டாலின் குரூப்.

இந்த விவகாரத்துக்கு பிறகு பன்னீர் அணிக்கும், எடப்பாடி அணிக்கும் இடையில் முறைப்பும், விறைப்பும் எழுந்ததை கண்கூடாக பார்த்து ரசித்தது ஸ்டாலின் டீம்.
தங்களின் பிளான் பக்காவாக ஒர்க் அவுட் ஆவதைக் கண்டு இப்படியான விஷயங்களை இனி அடிக்கடி அவையில் கொளுத்திப்போடுவது என்று முடிவு செய்திருக்கிறது தி.மு.க. எடப்பாடி அணியும், பன்னீர் அணியும் பிளவுபட்டு உச்சகட்ட மோதலில் நின்ற நேரங்களில் பரஸ்பரம் என்னவெல்லாம் திட்டினார்கள், அதில் எவையெல்லாம் மக்கள் நல திட்டங்கள் சம்பந்தப்பட்டவை என்பதை யோசித்து யோசித்து தோண்டித் துருவி தரவுகளை தயாரிக்கிறார்களாம்.
ஆக மொத்தத்துல அறிவாலயத்துல ரூம் போட்டு யோசிக்கிறாங்க.
