அரசுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்வதில் கருணாநிதியையே ஸ்டாலின் விஞ்சி விட்டார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். எம்ஜிஆரின் 33வது நினைவு நாளையொட்டி மதுரையில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு அன்னதானம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேடையில் பேசியதாவது: 

எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து மறைந்தாலும், மக்கள் மனதில் மங்காது வாழ்பவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கருணாநிதியை அழித்து பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை நிலைநாட்ட  அதிமுகழகத்தை ஆரம்பித்தார் எம்ஜிஆர். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியை தற்போது அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் கூட நினைத்துப் பார்ப்பதில்லை, தற்போது நடைபெறும் திமுக கூட்டங்களில் ஸ்டாலின் படமும் அவரது மகன் உதயநிதி படமும் தான் அதிக அளவில் காணப்படுகிறது. தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை செய்து வருகிறார். ஆனால் அதை மக்கள் யாரும் நம்ப போவதில்லை. 

ஸ்டாலின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, ஒருவகையில் பொய் பிரச்சாரம் செய்வதில் கருணாநிதியையே விஞ்சி விட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். திமுகவுக்கு கொள்கையே கிடையாது, பொய் பிரச்சாரம் ஒன்றை மட்டுமே தங்களின் மூலதனமாக வைத்து பதவி வெறி பிடித்து திமுகவினர் நாள்தோறும் மக்களை குழப்பி வருகின்றனர். இதற்கெல் லாம் வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் நீங்கள் தான் தீர்ப்பு எழுத வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுக அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடவே தயங்க வேண்டும். அந்த அளவிற்கு மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.