Asianet News TamilAsianet News Tamil

இப்படியா வன்முறையை தூண்டுவது? கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல... ராமதாஸை புரட்டியெடுக்கும் ஸ்டாலின்

ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கும் அளவிற்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்க வேண்டாம்! அது தமிழ்ச் சமூகத்திற்கே பேராபத்தானது!" என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

stalin statements against Ramadoss
Author
Chennai, First Published Apr 30, 2019, 3:54 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கும் அளவிற்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்க வேண்டாம்! அது தமிழ்ச் சமூகத்திற்கே பேராபத்தானது!" என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பொன்பரப்பி வன்முறையைக் கண்டித்து சென்ற 24-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் திரு இரா.முத்தரசன், பேராயர் திரு எஸ்றா சற்குணம், ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் விதத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்கள், “பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டி” ஓர் அறிக்கை வெளியிட்டு பதற்றச் சூழ்நிலையை உருவாக்கியிருப்பதற்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி வரும் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. சமூக நீதிப் போராளி பேராயர் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவர். சமூக நல்லிணக்கத்திற்காக உழைக்கும் இவர்கள் மீது கூட, அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு நம்பிக்கையில்லாமல் போனது மிகுந்த வேதனையளிக்கிறது. யார் மீதுதான் அவருக்கு நம்பிக்கை என்ற கேள்வியும் எழுகிறது. தம்மை அரசியலில் இன்னமும் நிலை நிறுத்திக்கொள்ள ஆக்கபூர்வமான பல வழிமுறைகள் இருக்கும்போது, டாக்டர் அவர்கள் பின்னடைவை ஏற்படுத்தும் வழியை ஏன் தேர்வு செய்கிறார் என்று அவர்மீது அன்பும் அக்கறையும் உள்ள பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். அவரே ஒரு கற்பனைப் பேச்சை மனதில்  செயற்கையாகக் கற்பித்து உருவாக்கிக் கொண்டு - அதற்கு பதில் என்ற வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டு - இந்த இரு தலைவர்கள் மீதும் வன்முறையை வீசும் தொலைபேசி மிரட்டல்களுக்குக் காரணமாக இருப்பது பொறுப்புள்ள முதிர்ந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு அழகல்ல; உரிய செயலும் அல்ல!

தேர்தலில் கூட்டணிகளும், முடிவுகளும் வெற்றி பெறும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அமையாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இருக்கலாம். இதுவே அரசியலின் இறுதிக் கட்டம் இல்லை. அரசியலில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தவர் அவர். தேர்தல் அரசியலில் அவற்றை சகஜமாக எடுத்துக் கொள்வதே அய்யா டாக்டர் ராமதாஸ் போன்ற தலைவர்களுக்கு ஏற்ற குணமாக இருக்க முடியும். அதை விடுத்து - அமைதியாக நல்லிணக்கத்துடன் வாழும் சமுதாயங்களிடையே வெறுப்பைக் கக்கி, திரு முத்தரசன் மற்றும் பேராயர் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கும் அளவிற்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ தெரியாமலோ உருவாக்குவது நமது தமிழ்ச் சமூகத்திற்குப் பேராபத்தானது.
 

தேர்தல் வெற்றி தோல்விகள் எல்லோருக்கும் பொதுவானவை என்பதை மருத்துவர் அய்யா நன்கறிவார். ஆகவே அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்கள் மீண்டும் இதுபோன்ற பதற்றச் சூழ்நிலைகள் உருவாகிடக்  கிஞ்சிற்றும் இடம் கொடுக்காமல் - தமிழகத்தில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் நட்புறவோடும் வாழ்வதற்கு ஏற்ற சுமூகமான சூழ்நிலைகளை மட்டும் உருவாக்கி - பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மேலும் மேலும்  முன்னேறுவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் அறிந்திருப்பவர் அவர். அவருக்கு இது நிச்சயமாக அறிவுரை அல்ல; மனப்பூர்வமான வேண்டுகோள். திரு இரா.முத்தரசன்  மற்றும் பேராயர் அவர்களுக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும்  உறுதியோடு பாதுகாத்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios