தன்னாட்சி அதிகாரம் பெற்ற “பல்கலைக்கழக மான்யக்குழுவை” ஒழித்து விட்டு, கல்வியைக் காவி மயமாக்குவதற்காக “உயர் கல்வி ஆணையம்” ஒன்றை அமைப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

கடந்த ஜூன் 27 ஆம் தேதி, “உயர்கல்வி ஆணைய வரைவு மசோதாவை” மனிதவள மேம்பாட்டு இணையதளத்தில் வெளியிட்டு, 62 ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக மான்யக்குழுவைக் கலைப்பதற்கு, 10 நாட்களில் கருத்துகளைக் கோரியது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை. “பெயரளவிற்கான” அந்த கருத்துக் கேட்பு வைபவத்திற்கு கல்வியாளர்கள் மத்தியிலிருந்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதும், மேலும் 13 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்து, ஜூலை 20 ஆம் தேதியுடன் கருத்துக் கேட்கும் படலத்தை முடித்துக் கொண்டு விட்டது.

இந்நிலையில் 19.7.2018 அன்று “உயர்கல்வி ஆணையம்” பற்றிய கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யாபால் சிங், “மசோதா தொடர்பாக 15.7.2018 வரை 7529 பேரிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன” என்று கூறி விட்டு, “கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் மான்யம் ஒதுக்குவதைப் பொறுத்தமட்டில் வெளிப்படைத்தன்மையுடன், தகுதி அடிப்படையில் உயர் கல்வி ஆணையம் இயங்கும்” (The grant disbursal function to Universities and Colleges is now proposed to be located in an entity which willl work in a transparent, merit based approach) என்று கூறி புதுக்குழப்பத்தை வேறு ஏற்படுத்தியிருக்கிறார்.

உயர் கல்வி ஆணையம் 14 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக இருக்கும். ஆனால் அதில் மாநிலப் பிரதிநிதி ஒருவர் கூட இருக்கமாட்டார். அந்த 14 பேர் கொண்ட ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க ஐந்து பேர் கொண்ட “தேடுதல் மற்றும் தேர்வுக் குழு” அமைக்கப்படும்.

அதிலும் ஒருவர் கூட மாநிலத்தின் சார்பில் பிரதிநிதியாக இருக்க மாட்டார்” என்பது, உயர் கல்வி ஆணையம் முழுக்க முழுக்க மத்திய அரசின் “கைப்பாவை”யாகவே இயங்கும் என்று வரைவு மசோதா தெளிவுபடுத்துகிறது.

இந்த ஆணையத்திற்கு மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்க உத்தரவிடும் அதிகாரம் இல்லை. ஆனால், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரமும், அங்கு நியமிக்கப்படும் துணை வேந்தர் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவரின் தகுதியையும் நிர்ணயிக்கும் அதிகாரமும் உண்டு.

கல்வியின் தரம் குறைந்து விட்டது என்று கூறி பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது, உயர்கல்வி தொடர்பாக மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குவது, மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிலையங்களை மூட உத்தரவிடுவது, மாநிலத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பது, கட்டணம் நிர்ணயிப்பது ஆகிய அடாவடியான அதிகாரங்கள் மட்டும் அள்ளிக் கொடுக்கப்பட்டு, மாநிலத்தின் கல்வி உரிமையைப் பறிப்பதற்கு என்றே ஒரு ஆணையத்தை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வர விரும்புகிறது.

இந்த அபாயத்தை முன் கூட்டியே சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் “நேரமில்லா நேரத்தின் போது” எழுப்பி, “தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்கள், அவற்றுக்கு அளிக்கப்படும் பல்கலைக்கழக மான்யக்குழு நிதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எச்.டி ஆராய்ச்சியாளர்களும், 200க்கும் மேற்பட்ட எம்.எஸ் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்வோரின் எதிர்காலம்” எல்லாம் என்ன ஆவது என்று கேள்வி எழுப்பினேன்.

குறிப்பாக உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிப்பதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமே என்ற அச்சத்தைத் தெரிவித்தேன்.

அப்போது மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் எழுந்து, “13 பல்கலைக்கழக துணை வேந்தர்களின் கருத்துகளைக் கேட்டிருக்கிறோம். அவற்றைப் பெற்று நிச்சயம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்” என்று உறுதியளித்தார்.

ஆனால் 14.7.2018 அன்று “உயர்கல்வி ஆணையம் தேவையில்லை” என்று வழக்கம் போல் ஒரு கடிதத்தை மட்டும் எழுதிவிட்டு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி அமைதி காக்கிறார். 13 பல்கலைக்கழகத் துணை வேந்தர்களின் கருத்துகள் என்ன? அவர்களின் கருத்துகள் மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பப்பட்டதா? என்பது பற்றி இதுவரை தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை.

குறைந்தபட்சம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள் 37 பேரும் வாக்களிப்பதற்கு முன்பு கூட மாநில உரிமை, சமூக நீதி, மாநிலத்தின் உயர் கல்வி ஆகியவற்றைப் பறிக்கும் உயர்கல்வி ஆணையத்தைக் கொண்டு வர மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மத்திய பா.ஜ.க. அரசிடம் கேட்டுப் பெறவில்லை என்பது வேதனையளிக்கிறது.

மத்திய அரசு கொண்டு வரும் உயர் கல்வி ஆணையம் என்பது ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட பாதிப்பை விட மிக மோசமான பாதிப்புகளை நாட்டின் உயர்கல்வியில் ஏற்படுத்தி விடும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கங்கள் மற்றும் அதன் கீழ் உள்ள கல்லூரிகளின் கல்வி முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக அமையும். பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு வித்திடும்.

கல்வியாளர்கள் நிறைந்த உயர் கல்வி ஆணையத்திடமிருந்து உயர்கல்விக்கு நிதி ஒதுக்கும் அதிகாரத்தை மத்திய அரசே பறித்துக் கொள்வது, மாநிலங்களின் நிதித் தன்னாட்சி மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலாக அமைந்து விடும். ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும் இந்த உயர்கல்வி ஆணையம், மாநிலங்களில் கல்வி வளர்ச்சிக்கு ஒருவகையிலும் உதவாது; மாறாக இருக்கின்ற கல்வி நிலையங்களையும் மூடுவதற்கே வழி வகுக்கும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனவே, மாநிலத்தின் கல்வி உரிமைக்கு மாறான இந்த உயர்கல்வி ஆணைய மசோதாவை மத்திய பா.ஜ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு வேளை “கல்வியை காவி மயமாக்குவதற்காக ஆணையம் அமைக்கவில்லை. உயர்கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வருவதே மத்திய அரசின் நேர்மையான நோக்கம்” என்றால், ஆணையத்தின் 14 உறுப்பினர்களில் மாநிலங்களின் பிரதிநிதிகள் மூன்றில் இரண்டு பங்கு இருக்குமாறும், பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் நிதி ஒதுக்கும் அதிகாரம் ஆணையத்திடமே இருக்கும் வகையிலும், உயர் கல்வி ஆணைய “வரைவு மசோதா” உரிய முறையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தவறினால் மற்ற மாநிலக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டி மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த உயர்கல்வி ஆணைய வரைவு மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.