Asianet News TamilAsianet News Tamil

பணம் தர்றதா சொல்லி இப்படி ஆசையை தூண்டலாமா? நீங்க நச்சுத்தன்மை கொண்ட தேள்... ஷார்ப்பா அடிக்கும் ஸ்டாலின்

மக்களாட்சி விரோத மத்திய - மாநில அரசுகளின் மீது, மக்களே பிரகடனம் செய்யும் ஜனநாயகப் போர்! என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே!

Stalin Statements against BJP and ADMK
Author
Chennai, First Published Sep 10, 2018, 12:14 PM IST

கழகத்தின் தலைமைப் பொறுப்பினை மிகுந்த பணிவன்புடன் ஏற்றுக்கொண்ட பிறகு, மாவட்டக் கழகச் செயலாளர்களையும், கழகத்தின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து, கழகத்தின் வளர்ச்சி மற்றும் நாட்டு நடப்பு தொடர்பான கருத்துகளைக் கேட்டறியும் வகையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்றைய தினம் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எந்தக் கூட்டம் நடைபெற்றாலும், அது கழகத்தை வலிவுபடுத்தும் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் குறித்த ஆலோசனைகளுடன் நின்று விடாமல், நாட்டில் நடைபெறும் சூழல்களைக் கருத்தில்கொண்டு அதற்காக கழகம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விவாதித்து ஒருமனதாக முடிவெடுத்து, தீர்மானங்களாக நிறைவேற்றி, அதனடிப்படையில் அடுத்தடுத்த கட்டங்களில் செயல்படுவதே தொடர்ந்து வழக்கமாக உள்ளது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களும், கழகத்தை என்றும் ஒளி வீசும் தீபமாய், கட்டிக் காத்து - நமக்குப் போதித்திருந்த அந்த ஜனநாயக வழியிலேயே, மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற கழக உறுப்பினர்கள் கூட்டத்திலும் மிகமுக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் வழியே, செயல்பட வேண்டிய களங்களும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அந்தத் தீர்மானங்களை கழகத்தின் போர் முரசமான “முரசொலி” ஏட்டின் வாயிலாகக் கலைஞரின் உடன்பிறப்புகள் அறிந்திருப்பீர்கள்; அறிந்து தெளிந்திருப்பீர்கள். கலைஞர் தொலைக்காட்சி மற்றும் பிற தொலைக்காட்சிகள் - நாளேடுகள் ஊடகங்கள் வாயிலாகவும், “வாட்ஸ்ஆப்” போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாகவும் உங்கள் கவனத்திற்கும் கருத்திற்கும் அந்தத் தீர்மானங்கள் வந்திருக்கும். எனினும், கழகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ள நான், அதுகுறித்து உடன்பிறப்புகளுக்குத் தெரிவிக்க வேண்டியது கடமை.

அந்தக் கடமையை ஆற்றுவதன் மூலம், உங்களில் ஒருவனான நானும் உங்களுடன் இணைந்து களம் கண்டு செயலாற்றுவதில் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற இயல்பான உத்வேகம் எனக்குள் ஏற்படும். கழகம் காண்கிற களத்தில் தலைமை முதல் ஆணிவேரான தொண்டர் வரை, அத்தனை பேரும் ஒரு தாய் மக்களென சமமாக இணைந்து நிற்பதுதானே இந்த இயக்கத்தின் அடிப்படை வலிமை! அதனால்தான் நெருக்கடிப் புயல்களிலும் சேதாரம் ஏதுமில்லாமல், தமிழகத்திற்கு என்றென்றும் நிழல் தரும் ஆலமரமாக தி.மு.கழகம் இருக்கிறது.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற கழக உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம், இந்தியத் திருநாட்டை அச்சுறுத்தி - அதன் பன்முகத்தன்மையைச் சீரழித்து வரும் மதவெறி பா.ஜ.க அரசின் காவிமயக் காரியங்களை ஜனநாயக வழியில் களைந்தெறிவோம் என்பதுதான்! ஆட்சிக்கு வருவதற்கு முன், மக்கள் மீது அக்கறை காட்டுவதுபோல பா.ஜ.க. தலைமை வாஞ்சையுடன் கொடுத்த வாக்குறுதிகள்தான் எத்தனை! எத்தனை!! கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப் போவதாக பெரும் எதிர்பார்ப்பையும் ஆசையையும் உண்டாக்கி, ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலையும் தருவதாக நம்ப வைத்து நாடெங்கிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளெல்லாம் அடடா.. நாக்கில் தேன் தடவியது போன்ற உணர்வை ஏற்படுத்தின.

வாக்குறுதிகள் தேன் போல இருந்தாலும், ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் செயல்பாடுகள் எல்லாமே, இந்தியாவின் ஒற்றுமையை – ஒருமைப்பாட்டை – பன்முகத்தன்மையை - பொருளாதார நிலைமையைச் சீரழிக்கும் விஷம் போலத்தான் அமைந்துள்ளன. பா.ஜ.க. அளித்துள்ள வாக்குறுதிகள் என்பவை சில துளி தேன். பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் என்பவை நாட்டை நச்சுத்தன்மையுடன் கொட்டுகின்ற தேள்.

மாநிலங்களின் நலன்களையும் அவற்றின் உரிமைகளையும் பறிப்பதை தனது நான்காண்டுகளாகத் தொடர் செயல்பாடாகக் கொண்டுள்ள மத்திய பா.ஜ.க அரசு, தன்னால் கால் ஊன்ற முடியாமல் போன தென் மாநிலங்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்துகிறது. அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தன் கையிலாடும் ஒரு பொம்மை அரசாக மாநில அரசை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் செயல்களை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தாய்மொழியாம் தமிழ் மொழி மீதான தாக்குதல், தமிழ்ப் பண்பாட்டு மீதான தாக்குதல், நீட் தேர்வின் மூலம் சமூக நீதிக்கு எதிரான தாக்குதல், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் முதல் பல வித திட்டங்களால் விவசாயிகள் – கிராம மக்களின் வாழ்வுரிமை மீதான தாக்குதல் எனத் தொடர்ச்சியாகப் பலவகைத் தாக்குதல்களைத் தமிழ்நாடு சந்தித்து வருகிறது. எனவே, தமிழகம் மீதான பா.ஜ.க.வின் தாக்குதலையும், நாடு முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் அதன் மதவெறிச் செயல்பாட்டையும் எதிர்கொண்டு வீழ்த்திட, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோர் வகுத்துத் தந்த வாகான வழியில் செயல்படுவது என்பது முதல் தீர்மானத்தின் நோக்கமாகும்.

இரண்டாவது தீர்மானம் என்பது, ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கின்ற கொள்ளைக்கார அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வகையில், வீடுகள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பெரும் பணியை உங்களுக்கும் உங்களில் ஒருவனான எனக்கும் தந்திருக்கிறது. “இன்னல்களின் இருண்ட குகையாக” தமிழ்நாட்டைக் கெடுத்து வைத்திருக்கும் அவலம் நிறைந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பெரும் துயரத்திற்குள்ளாகி வாழ்வுரிமையை இழந்து வருகின்றனர்.

மாநிலத்தை ஆள்பவர்களுக்கு அதுகுறித்து சிறிதும் கவலையின்றி, கஜானாவை கொள்ளையடிப்பதே ஒரே நோக்கமாக இருக்கிறது. குட்கா ஊழல், குவாரி ஊழல், முட்டை ஊழல், நெடுஞ்சாலைப் பணிகளில் ஊழல், போக்குவரத்து ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், வாக்கி - டாக்கி ஊழல் என தொட்ட துறைகளில் எல்லாம் ஊழலோ ஊழல் என ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் சீர்குலைத்துள்ள இந்த அவலகரமான ஆட்சியின் முதல்வரும், துணை முதல்வருமே நேரடியாகவும் மறைமுகமாகவும் ரெய்டுக்குள்ளாகி நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். முதல்வரில் தொடங்கி அமைச்சர்கள் வரை தங்கள் சொந்தங்களின் பினாமி கம்பெனிகள் மூலமாக அரசாங்கக் கருவூலத்தைக் கொள்ளையடிக்கும் அபூர்வத் தொழில்நுட்பம் குறித்த ஆவணங்களும் ஆதாரங்களும் அம்பலமாகி வருகின்றன.

மத்திய அரசிடம் மாநில உரிமைகளை அடகு வைத்து, ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு மிச்சமிருக்கும் காலம் வரை எதையும் மிச்சம் வைக்காமல் கொள்ளையடிக்கலாம் என நினைக்கும், முதுகெலும்பில்லாத அ.தி.மு.க. ஆட்சியைத் தூக்கி எறியும் வகையில் கழகத்தின் ஜனநாயகப்பூர்வ செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தீர்மானம் மூலமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மக்கள் விரோத மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்குலைந்துள்ள நிலையில், அதனை மாற்றுவதற்கு பொதுமக்களின் கையில் உள்ள ஒரே ஆயுதம், வாக்குரிமை. அந்த வாக்குரிமையிலும் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பமும் தலையீடும் கோலோச்சி, உண்மையான வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, போலி வாக்காளர்களை சேர்த்திடும் போக்கு தொடர்ந்திடும் நிலையில், வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் வகையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியை, கண்ணும் கருத்துமாகக் கழகத்தினர் மேற்கொள்வதற்கு வழிகாட்டும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆட்சி நிர்வாகத்தின் அவலட்சணத்திற்குச் சான்றாக, காவிரி ஆற்றில் தண்ணீர் பெருகி வந்தும் அதனைக் கடைமடை விவசாயத்திற்குப் பயன்படுத்த வழி செய்யாமல், முக்கொம்பு மதகுகள் உடைகிற அளவிற்கு பராமரிப்பு பணிகளில் அலட்சியம் காட்டி, வேளாண்மைக்குப் பயன்பட வேண்டிய நீரை வீணாகக் கடலில் கலக்கச் செய்து, விவசாயிகளைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியுள்ள எடப்பாடி பழனிசாமி ஆட்சியைத் தோலுரிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் அளித்துள்ள சட்டரீதியான வாய்ப்பினைப் பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் கழகத் தீர்மானத்தின் வழியாக நமது உணர்வின் குரல் எழுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பெட்ரோலியப் பொருட்கள் விலை தொடர்பான மக்கள் விரோதக் கொள்கைகளால் பெட்ரோல் – டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கடும் விலையேற்றத்தைச் சந்தித்து, அதன் விளைவாக ஒட்டுமொத்த வணிக செயல்பாடுகளும், வாகனப் போக்குவரத்தும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கிடுகிடு விலையேற்றத்தை எதிர்த்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி நடத்தும் பாரத் பந்திற்கு தி.மு.கழகம் தனது முழுமையான ஆதரவினை வழங்கி, அதில் பங்கேற்று வெற்றி பெறச் செய்வதற்கான தீர்மானம் காலத்தின் தேவை கருதி அமைந்ததாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்நாட்டின் மானத்தை இந்தியா முழுவதும் சந்தி சிரிக்க வைக்கும் குட்கா ஊழலில், 2011 முதல் இன்றைய நாள் வரையிலான அ.தி.மு.க.வின் 3 முதலமைச்சர்கள், 2 தலைமைச் செயலாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோரின் அதிகார துஷ்பிரயோகத்தால் அமைச்சர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரவர்க்கத்தினர் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள்.

யார் யார் எவ்வளவு லஞ்சம் பெற்றுள்ளார்கள் என்பதற்கான டைரியும் வாக்குமூலங்களும் ஆதாரங்களும் வெளிப்பட்டுள்ள நிலையில், சி.பி.ஐ. நடத்திய ரெய்டுக்குப் பிறகு சென்னை மாநகரக் காவல்துறை முன்னாள் ஆணையரே குட்கா ஊழல் என்பது உண்மைதான் என, ஊடகங்களில் நேரடியாகத் தெரிவித்துள்ள நிலையில், வெட்கம் - மானம் ஏதுமின்றி, அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. ஊழலுக்கு எதிரானவர்கள் என்பது போல காட்டிக்கொள்ளும் மத்திய ஆட்சியாளர்களின் பிரதிநிதியான ஆளுநரும், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டை தேசிய அளவில் தலை குனிய வைத்திருக்கும் குட்கா ஊழலில் நேரடித் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்றும், ஊழல் ஆய்வுப்பட்டத்துடன் பதவியில் உள்ள காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் கழகத் தீர்மானம் குரல் உயர்த்தியுள்ளது.

மானமிழந்த அ.தி.மு.க. அரசின் கீழ் இந்த மாநிலம் நீடிக்கின்ற நாள் அனைத்தும் வீழ்ச்சியும் அவமானமும் தவிர, வேறெதுவும் விளையப் போவதில்லை. மத்திய வருமான வரித்துறையினரின் ஆய்வின் மூலமாக முதலமைச்சரின் சம்பந்தி தொடர்புடைய டெண்டர் ஊழல்கள் அம்பலமாகியுள்ளன. துணை முதல்வரின் உறவினர்கள் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. குட்கா ஊழலில் அமைச்சரும் டி.ஜி.பி.யும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்தங்களுடைய பினாமி கம்பெனிகளின் டெண்டர் முறைகேடுகள் ஆதாரங்களுடன் வெளிப்பட்டுள்ளன.

கோட்டையில் ஆட்சி நடத்திக்கொண்டு நாட்டையே தனது கொள்ளைக் கூடாரமாக மாற்றி விட்ட அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மாவட்டத் தலைநகரங்களில் 18-09-2018 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளாகிய உங்களுக்கும் உங்களில் ஒருவனாகத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் எனக்கும் முதல் கட்டத் தேர்வு. தலைவர் கலைஞரின் கட்டளைகளை இன்முகத்துடன் ஏற்று இதுநாள்வரை எப்படி செயல்பட்டோமோ அதே கட்டுக்கோப்புடன், அதே இலட்சிய உணர்வுடன், அணி அணியாகத் திரண்டு, அலை உருண்டோடும் கடலென ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டை முழங்குவோம்.

மக்கள் நலனைப் புறக்கணித்து, மாநிலத்தை ஆளுகிற அ.தி.மு.க.வையும், அதற்குத் துணை நிற்கும் மதவாத எண்ணம் கொண்ட மத்திய பா.ஜ.க அரசையும் ஜனநாயக வழியில் விரட்டிட - வீழ்த்திட ஆயத்தமாவோம்!

Follow Us:
Download App:
  • android
  • ios