Stalin statements against ADMK govt
‘குதிரை பேர’ அதிமுக அரசு செயலற்று கிடைப்பதால் இப்போது தமிழகம் முழுவதும் 7000-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தி வந்தாலும், இந்த ‘குதிரை பேர’ அதிமுக அரசு செயலற்று கிடைப்பதால் இப்போது தமிழகம் முழுவதும் 7000-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை சென்னை ஸ்டேன்லி மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களை நலம் விசாரித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன். அப்போது என்னிடம் பேசிய அவர்கள் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் ஒரே படுக்கையில் இரண்டு பேரை படுக்க வைப்பது, சிலரை தரையில் படுக்க வைப்பது என்ற போக்கு நிலவுவதாகவும், குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என்றும் தங்களது குறைகளை பட்டியலிட்டார்கள்.
ஆனால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் ‘குட்கா புகழ்’ விஜயபாஸ்கர் அவர்கள், களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், டெங்கு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று, பல தவறான தகவல்களை தந்து கொண்டிருக்கிறாரே தவிர, முறையான தகவலை, இவ்வளவு பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மையான செய்தியைக் கூட வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார். அதேபோல், குதிரை பேரத்தின் மூலம் ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் இதுபற்றிக் கவலைப்படவில்லை.
டெங்கு காய்ச்சல்கள் இன்றைக்கு இந்தளவிற்கு உருவாகியிருப்பதற்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் இல்லாததும் ஒரு காரணமாகியிருக்கிறது. எப்படி ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ அமைச்சர் விஜயபாஸ்கர் போதைப் பொருளான குட்காவை விற்க லஞ்சம் வாங்கி அனுமதித்திருக்கிறாரோ, அதேபோல உள்ளாட்சித் துறையின் அமைச்சராக இருக்கும் வேலுமணி அவர்கள், எங்கு லஞ்சம் வாங்கலாம், எந்த காண்டிராக்டரிடத்தில் கமிஷன் வாங்கலாம் என்று திட்டம் போட்டு அந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பது வேதனையளிக்கிறது.
வருகின்ற அக்டோபர் 4ம் தேதி தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றபடியான தீர்ப்பு நீதிமன்றத்தின் மூலம் வரும். அப்படி வருகின்ற தீர்ப்பையடுத்து, தமிழகத்தில் அமையவிருக்கின்ற திமுக ஆட்சியில், ‘குதிரை பேர’ ஆட்சியில் யார் யாரெல்லாம் ஊழல் செய்து இருக்கிறார்கள், எவ்வளவு லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள் என்பதை எல்லாம் கண்டுபிடித்து, அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, உரிய தண்டனை நிச்சயமாக கிடைக்கும். என இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
