சிறந்த நிர்வாக திறன் படைத்த நேர்மையாளர்களை அரசு பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினர்களாக நியமித்து அரசு பணியாளர் தேர்வாணையத்தை அரசியல் பிடியிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுக அரசால் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதை கண்டித்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் தலைமையிலான அமர்வு வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பில் "அதிமுக ஆதரவாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை நியமனம் செய்ததில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லை. 

இது போன்ற நியமனங்களில் பஞ்சாப் வழக்கு உள்ளிட்ட பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டல் எதையும் பின்பற்றவில்லை" என்று சுட்டிகாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்தாடும் நேரத்தில் அரசு பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு அதிமுகவினரையும், குறிப்பாக முன்னாள் முதல்வரின் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களையும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் போல் செய்தி துறையில் செயல்பட்டவரையும் பப்ளிக் சர்விஸ் கமிஷன் உறுப்பினர்களாக்கி அரசு பணியாளர் தேர்வாணையத்தை அதிமுக தலைமைக் கழகமாக மாற்றிய அதிமுக அரசுக்கு இந்த தீர்ப்பு சரியான சவுக்கடியாக அமைந்திருக்கிறது.

 இத்தீர்ப்பு எண்ணற்ற இளைஞர்களுக்கு தேர்வாணையத்தின் மீது ஒரு மிகப் பெரும் நம்பிக்கையை அளித்திருக்கிறது. இனிமேலாவது அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனத்தில் வெளிப்படை தன்மையையும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், சிறந்த நிர்வாக திறன் படைத்த நேர்மையாளர்களை அரசு பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினர்களாக நியமித்து அரசு பணியாளர் தேர்வாணையத்தை அரசியல் பிடியிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட வேண்டும் என அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.