சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் எந்த அணியை ஆதரிப்பீர்கள் என்ற கேள்விக்கு நல்ல முடிவெடுப்போம் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று கூடியது. அந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி இல்லாத காரணத்தால், தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி, பலவகையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

குறிப்பாக நீட் தேர்வு குறித்து ஒரு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. 

தமிழகம் இன்றைக்கு கடுமையான வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டு, குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. ஆக, இதையெல்லாம் அடிப்படைகளாக வைத்து, 11 தீர்மானங்கள் திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால், இதுபற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல், யார் முதலமைச்சராக அமர்வது என்ற பதவி வெறி பிடித்த நிலையில், ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, காபந்து முதலமைச்சராக உள்ள மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மக்கள் பிரச்சினைகள் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தொடர்ந்து தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதில், அவரது கவனம் இருந்து கொண்டிருக்கிறது. ஆக, கூவத்தூருக்கும், கிரீன்வேஸ் சாலைக்கும் இடையில் பதவிச்சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று போடப்பட்டுள்ள 11 தீர்மானங்களில் கடைசி தீர்மானமாக, தமிழகத்தின் ஆளுநர் அவர்கள் இனியும் நேரத்தை வீணடிக்காமல், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசியல் சாசன சட்டப்படி, உடனடியாக தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைவதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அதையே இங்கும் நான் உங்கள் மத்தியில் வலியுறுத்துகிறேன்.

கேள்வி: நிலையான ஆட்சி என்றால் ஆளுநர் என்ன செய்ய வேண்டும்?

தளபதி: ஏற்கனவே நாங்கள் ஆளுநரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதில் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் சுட்டிக்காட்டி இருக்கிறோம். எனவே சட்டசபையில் உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களித்து, யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ, அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். எப்போது இந்தப் பிரச்சினை ஆரம்பித்ததோ அப்போது முதல் அதையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கேள்வி: தமிழகத்தில் ஒரு அசாதாரணமான அரசியல் சூழ்நிலை நிலவி வரும்போது, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை என்னவாக இருக்கும்?

தளபதி: தீர்ப்பு வந்த பிறகுதான் அதுபற்றி சொல்ல முடியும்.

கேள்வி: சசிகலா உங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்ல விரும்புகிறீர்கள்?

தளபதி: ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். சசிகலாவின் கூற்றுகளுக்கு எல்லாம் பதில் சொல்லி எனது தரத்தையும், நேரத்தையும் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அதையே இப்போதும் சொல்கிறேன்.

அதிமுக என்பது எங்களுடைய எதிரி. சட்டமன்றத்தினை பொறுத்தவரையில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால், அரசியலை பொறுத்தவரையில் அதிமுக என்பது எங்களுக்கு எதிரிதான். அதிமுக இப்போது இரண்டாக சசிகலா, ஓ.பி.எஸ் அணிகளாக பிரிந்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக இரண்டுமே அதிமுக தான்.

ஏற்கனவே 5 வருடமாக ஜெயலலிதா தலைமையில் ஆட்சி இருந்தபோது எப்படி இந்த நாடு குட்டிச்சுவராகிப் போனதோ, கொள்ளையடித்தார்களோ அதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் அதேபோல கொள்ளையடிப்பதற்கு தான் பதவி வெறி பிடித்து போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

எனவே அவர்களைப் பொறுத்தவரையில் எங்களுக்கு எதிரி தான். யாருக்கும் நாங்கள் பின்பக்காமாக ஆதரவு தெரிவிப்பதோ அல்லது சசிகலா சொல்வதுபோல் நாங்கள் பேசுவது, சிரிப்பது என அவரின் மனதிற்கு தகுந்தார் போல் அரசியலுக்காக அவர் பேசிக் கொண்டிருக்கலாமே தவிர, அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அவரின் அரசியல் தராதரம் அது.

கேள்வி: சுப்ரமணியசாமி சசிகலாவிற்கு ஆதரவு தருவதுபோல் பேசி வருகிறார். இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?

தளபதி: சுப்ரமணியசாமி சொல்வதை அவருடைய கட்சியே ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறதே?

தளபதி: இதை எப்படி நீங்கள் உறுதியாக சொல்கிறீர்கள். நீங்களாக கற்பனை செய்து கொண்டு கேட்பதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. கூவத்தூரில் ஒரு க்ரூப் அடைக்கப்பட்டது பற்றி கேட்டால் அர்த்தம் உண்டு. அது போல அவர்கள் எங்காவது அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்களா? அப்படி இருந்தால் பிறகு கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்.

கேள்வி: சட்டமன்றத்தில் பலப்பரீட்சை நடக்கிறபோது அதிமுக இரண்டு அணியாக இருக்கும். எந்த அணிக்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள்?

தளபதி: அப்படியொரு சூழல் வருகிறபோது, அந்த நிலை வரும்போது, திமுக ஒரு நல்ல முடிவை எடுக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.