கொரோனா காலத்திலும் மக்களை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க, அறைக்குள் அடைபட்டுக் கிடந்த ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான கே.டி ராஜேந்திர பாலாஜி  நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசியலில் ராசா மூலம் ஒரு கீழ்த்தரமான அரசியலை திமுக தலைவர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். விவசாய சட்டங்களையும் விவசாயிகளைப் பற்றியும் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் கிடையாது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூறியது உண்டா.? 

எதுவுமே செய்யாமல் ஸ்டாலின் அறைக்குள் அடைபட்டுக் கிடந்தார், ஆனால் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து, ஆய்வு செய்து அதை கட்டுப்படுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கே, அறைக்குள் அடைபட்டுக் கிடந்த ஸ்டாலின் எங்கே. ரூமுக்குள் அடைந்து கிடந்த ஸ்டாலினுக்கு எங்களது எடப்பாடியாரை விமர்சிக்க தகுதியே கிடையாது. கொரோனா காலத்திலும் ஆஸ்திரேலியா சென்று தலை முடியை வளர்த்ததில்தான் ஸ்டாலின் வேலையாக இருந்துள்ளார். தலை முடியை வளர்க்க மட்டும் ஸ்டாலின் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார். மக்களிடத்தில் அரசியலில் வீழ்ந்துபோன திமுக, மக்கள் மத்தியில் எடுபடாத திமுக, இன்று மக்கள் மத்தியில் மிகவும் கேவலமான கீழ்த்தரமான அரசியலை  கையில் எடுத்துள்ளது. 

உழைக்கும் வர்க்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் கட்சி அண்ணா திமுக ஆனால் பிழைப்புக்காக கட்சி நடத்துவது திமுக மட்டுமே. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 2ஜி வழக்கில் ராசாவை கைது செய்து இழுத்துச் சென்றதை இந்த நாடே வேடிக்கை பார்த்தது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வீட்டுக்கே சென்று சிபிஐ விசாரணை  நடத்தியதையும் இந்த நாடே வேடிக்கை பார்த்தது, எனவே திமுகவும் திமுக தலைவர்களும் தமிழக மக்களை என்றுமே ஏமாற்றவே முடியாது.  ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சியும் திமுக என்பதை இந்த நாடே அறியும் என கடுமையாக சாடியுள்ளார்.