தி.மு.கவின் தென்மண்டல மாநாடு விருதுநகர் அருகே நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``கடந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் விருதுநகரில் தி.மு.க மாநாடு நடந்தது.

அந்தத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தி.மு.க ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அதேபோல் மீண்டும் வரலாறு திரும்புகிறது. 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். நாம் சுட்டிக் காட்டும் ராகுல்காந்தி பிரதமராக ஆட்சி அமைப்பார் என தெரிவித்தார்.

குட்கா ஊழல், சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, கொடநாடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்கு விவகாரங்களை வைத்து அ.தி.மு.கவை மிரட்டி நீங்கள் அமைத்துள்ள கூட்டணியை  நாங்கள் எப்படி அழைப்பது. உங்கள் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியா. நாடு முன்னேற நாங்கள் அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணியா?.என அவர் கேள்வி எழுப்பினார்.

வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்குப் பணம் வழங்கப்படுவதை நாங்கள் தடுக்கவில்லை. 60 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் வறுமைக்கோட்டில் இருப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதா?. ஏன் குறைக்கவில்லை?.
 
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா அல்ல. அது நாடகம். நீட் தேர்வு விலக்கு? பேரறிவாளன் விடுதலை? கஜா புயல் நிவாரணத்துக்கு மாநில அரசு கேட்ட ரூ.4000 கோடி நிதி. ஜி.எஸ்.டி. தொகை என்ன ஆனது? மேகதாது  அணையை ஏன் தடுக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் செயல்படுத்தப்பட்டுள்ளதா?. தமிழக மீனவர் கைது நிறுத்தப்பட்டதா?. பிரதமரால் பதில் சொல்ல முடியுமா?. எதுவும் செய்யாமல் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டுக் கேட்க வருகிறார். அடுத்தமுறை பிரதமர் தமிழகம் வரும் போது அவர் பதில் சொல்ல வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்..

பாமக ராமதாஸ் தற்போது எடப்பாடி பழனிசாமியிடம்  பி.ஆர்.ஓ. வேலைக்குச்  சேர்ந்துள்ளார். இதற்காக அவர் எடப்பாடியிடம் மொத்த சம்பளம் வாங்கிவிட்டார் என்று ராமதாசையும் ஸ்டாலின் மிகக் கடுமையாக பேசினார்.