திமுக தென்மண்டல மாநாடு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் விருதுநகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அவர், தமிழகத்தின் அவல நிலைக்கு திமுக முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், அதற்கான தொடக்கம் தான் இந்த மாபெரும் விருதுநகர் மாநாடு எனவும்  தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியுடன் இந்திரா காந்தி காலம் முதல் கூட்டணி வைத்துள்ள எங்களைப் பார்த்து  சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்லும் பிரதமர் மோடி வைத்திருக்கும் கூட்டணி என்ன விதமான கூட்டணி ?  என அவர் கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பார் என்று ஓபிஎஸ் கூறியது மிகப்பெரிய பொய், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கூட்டணி வைத்திருக்க மாட்டார் என ஸ்டாலின் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வருகிறது. மீண்டும் நாம் 40க்கு 40 இடங்களை பெறுவோம். நாம் விரும்பும்,  நாம் சொல்லும் நபர்தான் பிரதமராக வருவார். அதுவும் ராகுல் காந்திதான் பிரதமராக வருவார் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்வதாக  ஸ்டாலின் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து மக்களை கவனிப்பது போல சீன் காட்டுகிறார். மோடி நன்றாக நடிக்கிறார். மோடி அடிக்கடி இனி வந்து இப்படித்தான் பேசுவார். 130 கோடி மக்களை மோடி நடுத்தெருவில் நிறுத்தினார்.பணமதிப்பிழப்பு நீக்கம் மூலம் நடு ரோட்டிற்கு மக்களை கொண்டு வந்தார், என்று ஸ்டாலின் கடுமையாக பேசினார்.