தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற அனுமதி அளிக்க மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி அலங்காநல்லூரில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக மதுரை வந்த ஸ்டாலின் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.  இன்று காலையில் அவர் பொதுமக்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டார்.

பின்னர் இன்று காலை 10 மணிக்கு விடுதியில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லூருக்கு புறப்பட்டார். 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஸ்டாலினுக்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அலங்காநல்லுரில் பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த ஜல்லிக்கட்டு ரசிகர்களிடையே பேசிய ஸ்டாலின் தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாகவே ஜல்லிக்கட்டு இருந்து வந்துள்ளது.உச்ச நீதிமன்ற அறிவுரைகளை அதிமுக ஆட்சி காலத்தில் பின்பற்றாததால்தான் ஜல்லிக்கட்டுக்குக் கொடுத்த அனுமதி ரத்து செய்யப்பட்டது என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்து விட்டு திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டிப்பாக நடத்தியிருப்போம் என்றார்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மத்திய அரசு சார்பில் உறுதி அளித்த வந்தாலும் அதற்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

ஜல்லிக்கட்டு வரும் ஆனால் வராது என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது என்றும் இதை நகைச்சுவையாக சொல்லவில்லை என்றும் மிகுந்த வேதனையுடன் சொல்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என சட்டப்பேரவையில் ஓபிஎஸ் கொடுத்த வாக்குறுதி என்னவானது? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.