stalin speak about karunanidhi reaction about 2G case verdict

2ஜி தீர்ப்பின் விவரத்தை சொன்னதும் தனது கையை பிடித்து கருணாநிதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய 2ஜி முறைகேடு வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்பி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் திமுக மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டாக 2ஜி முறைகேடு இருந்துவந்தது. இந்நிலையில், அந்த வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2ஜி முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாக கூறி அனைவரையும் நீதிபதி ஷைனி விடுவித்துள்ளார்.

இந்த தீர்ப்பின் மூலம், திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், தங்களின் மீதான ஊழல் கறைகளை துடைத்து சுத்தமானவர்கள் என தங்களை நிரூபித்து விட்டதாக குதூகலிக்கின்றனர். திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் இந்த தீர்ப்பை கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, நானும் பொதுச்செயலாளர் அன்பழகனும் 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து கருணாநிதியிடம் கூறினோம். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த கருணாநிதி, எங்களது கைகளை பிடித்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு இது. அநீதி வீழும்; அறம் வெல்லும் என்று இரண்டே வரியில் கருணாநிதி கூறியிருந்தார். அதைப்போலவே அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது. 2ஜி வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது சில ஊடகங்களும் கூட திட்டமிட்டு திமுகவின் மீது களங்கம் ஏற்பட்டுத்த முயற்சி செய்தன. அதில் ஓரளவு வெற்றியும் கண்டன என்றே கூற வேண்டும். ஆனால், திமுகவின் மீது களங்கமில்லை என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.