‘கொலையுதிர்காலம்’ என்ற பட விழாவில் நடிகர் ராதாரவி பங்கேற்றார். அந்த விழாவில் நடிகை நயன் தாராவை பற்றி சர்ச்சையாகப் பேசினார். ‘முன்பெல்லாம் நடிகை கே.ஆர். விஜயா மட்டுமே கடவுளாக நடிப்பார். இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கிறார்கள். பார்த்ததும் கையெழுத்து கும்பிடுவதைப் போல இருப்பவர்களும்; பார்த்ததும் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள். காரணம் யார் நடித்தாலும் ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள்’ என்று ராதாரவி பேசியிருந்தார். இந்நிலையில் நடிகர் ராதாரவியை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை நடவடிக்கை எடுத்திருந்தது.


இதற்கிடையே திமுக நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ராதாரவி, “என்னால் கட்சிக்கு பாதிப்பு என்றால், திமுகவிலிருந்து விலகி கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை அவர் வெளியிட்ட சிறிது நேரத்தில் நடிகர் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்து திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 
 அதில், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.