நடராஜன் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும் கருணாநிதியின் அன்பை பெற்றவர் நடராஜன் என்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிபட்டு வந்த சசிகலா கணவர் நடராஜனுக்கு கடந்த அக்டோபர் மாதம் உறுப்பு கிடைத்தது. பின்னர், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். 

பின்னர் வீட்டில் இருந்தே செக் அப் செய்து வந்தார். இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.35 மணிக்கு நடராஜன் உயிரிழந்தார். அவரின் உடல் பெசண்ட் நகர் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். உடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், நடராஜன் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும் கருணாநிதியின் அன்பை பெற்றவர் நடராஜன் என்றும் புகழாரம் சூட்டினார். 

தமிழ் இலக்கியங்கள் மீதும் திராவிடம் மீதும் தீராத பற்றுடையவர் எனவும் குறிப்பிட்டார்.