தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ஆலோசரனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரனுடனான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. நேற்று அதிமுக கட்சி அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், டிடிவி தினகரன் நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுக பொது செயலாளர் சசிகலாவால் நியமிக்கப்பட்ட என்னால் எடப்பாடி பழனிசாமியை கட்சியைவிட்டு நீக்க முடியும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், அதிமுகவில் பொது செயலாளர் இடம் நிரப்பப்படவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில், திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக அணிகளுக்கிடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. 

அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தபோதே அசாதாரண சூழ்நிலை ஏற்பட தொடங்கிவிட்டது. இதனால், மக்கள் துன்பத்துக்கும் துயரத்துக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு ஒரு முடிவு வேண்டும். 

தேவைப்பட்டால், தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.