stalin said Modi came to the function at Dinathanthi Pavela festival
தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சிக்குத்தான் மோடி வந்தார் எனவும் திமுகவின் மூத்த தலைவர் என்ற முறையில் கருணாநிதியை சந்தித்தார் எனவும் செயல்தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தினத்தந்தி பவளவிழா மற்றும் பிரதமர் அலுவலக இணை செயலாளர் சோமநாதன் இல்லத்திருமண விழா ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் கருணாநிதியை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. அதன்பின்னர், பிரதமர் மோடி கருணாநிதியின் இல்லத்திலிருந்து கிளம்பினார்.
இதில் அரசியல் பிரவேசம் எதுவும் இருக்கிறதா என திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின் தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சிக்குத்தான் மோடி வந்தார் எனவும் திமுகவின் மூத்த தலைவர் என்ற முறையில் கருணாநிதியை சந்தித்தார் எனவும் விளக்கமளித்தார்.
மேலும் நீங்க நினைக்கிற மாதிரி இதில் அரசியல் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை என குறிப்பிட்டார்.
