நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி பேரவை செயலாளரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் 18ஆம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது திமுகவினர் ரகசிய வாக்கெடுப்பு கோரி அமளியில் ஈடுபட்டனர். மேலும் திமுகவினர் சபாநாயகரை பிடித்து தள்ளி அவரது நாற்காலியில் அமர்ந்தனர்.

வெளியேற மறுத்து தர்ணாவில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களை குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு போய் வெளியேற்றினர். அதில், ஸ்டாலின் கிழிந்த சட்டையோடு வெளியே வந்தார்.

இதையடுத்து இதுகுறித்து ஆளுநரிடம் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், துணைத்தலைவர் துறை முருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேரில் சென்று புகார் அளித்தனர்.

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகம் வந்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கடிதத்தின் நகல் சபாநாயகரிடமும் தரப்பட்டது.

சட்டபேரவையில் சபாநாயகர் நடந்து கொண்ட முறை உள்நோக்கத்துடன் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார்.

ரேசன் கடைகளில் சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, முதல்வர் கோட்டையில் இருக்கிறார் அவரிடம் கேளுங்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவரிடம் சட்டசபையில் இருந்து வெளியே வரும் போது சட்டை கிழியாமல் இருப்பது போலவும், பின்னர் கிழிந்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பட்டது.

இது குறித்து தான் பதிலளிக்க விரும்பவில்லை. முறைப்படி கவரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் குடியரசுத்தலைவரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.