பிரதமருக்கு முதல்வர் கொடுத்த மனுவில், தங்களது ஆட்சிக்கு பங்கம் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு கோரியிருப்பார் என்றே தாங்கள் நினைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி உரிமை மீட்பு பயணத்தை முடித்த ஸ்டாலின், இன்று அண்ணா அறிவாலயத்தில் தோழமை கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம் வலியுறுத்துமாறு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சி தலைவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள கால அவாகசமான மே 3ம் தேதி வரை பொறுத்திருக்காமல், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்துமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்ததாக ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், பிரதமரை அனைத்து கட்சித் தலைவர்கள் சந்தித்து பேச அனுமதி பெற்றுத்தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு பிரதமரை சந்திக்க அனுமதி பெற்றுத்தர முயற்சிப்பதாக ஆளுநர் உறுதியளித்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

நேற்று சென்னை வந்த பிரதமரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி மனு அளித்தது தொடர்பாக ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், பிரதமரிடம் கொடுத்த மனுவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியதாக செய்திகள் தான் வந்தன. ஆனால், அந்த மனுவில், தங்கள் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம் என ஸ்டாலின் பதிலளித்தார். மேலும் கடைசி நேரத்தில் விமான நிலையத்தில் வைத்து அந்த மனுவை அளித்திருப்பது நாடகம் என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்.