stalin questions venkaiah naidu
தாய்மொழியை மாற்றுவது தாயை மாற்றுவதற்கு சமம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இந்தி உங்களுக்கு தாய் மொழியா என வெங்கய்யா நாயுடுவுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அண்மையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தனது தாய் மொழி இந்தி என்று கூறியிருந்தார். மேலும் இந்தியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில் சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஆந்திராவில் பிறந்து தெலுங்கு பேசக் கூடிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தனது தாய்மொழியை மாற்றி விட்டாரா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் தாய்மொழியை மாற்றுவது தாயை மாற்றுவதற்கு சமம் என்றும் மு.க ஸ்டாலின் கூறினார். இந்தி திணிப்பை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதில், தி.மு.க., ஒருபோதும் பின்வாங்காது என்றும் , தமிழகத்தில் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போரை கொண்டுவந்து விட வேண்டாம் என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
