"போலீஸ் ஸ்டேஷன் மீதே குண்டு வீச்சு" - சட்டப்பேரவையில் ஸ்டாலின் சரமாரி கேள்வி!!
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீஸ் ஸ்டேசன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது, அப்பகுதியில் உள்ள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதனை போக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீது நேற்று மர்ம நபர்கள் சிலர் திடீரென பெட்ரோல் குண்டுகள் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அப்போது போலீஸ் ஸ்டேஷனில் இருந்த 6 சிசிடிவி கேமராக்களில் ஒன்று மட்டுமே இயங்கியதாக தெரிகிறது. இதனால் குற்றவாளியை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒரு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் இருந்து குற்றவாளிகளை கண்டு பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவம் குறித்து தனிப்படை மூலம் விசாரணை நடைபெற்று வருவதாக விளக்கமளித்துள்ளார்.
தனிப்படை அமைத்தும், சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேரை கைது செய்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.