திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

சென்னை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் ஆற்று மணலுக்கு பதில் எம். சாண்டை பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக கடந்த மாதம் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில்;- மாநகராட்சி பகுதிகளில் நடைபாதை அமைக்கும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி உதவியுடன் நடைபெறும் ஒப்பந்த பணிகளில், ஆற்று மணலுக்கு பதில் எம்.சாண்டை பயன்படுத்தி இந்த முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறினார். 

அதில், ரூ.1000 கோடி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் புகார் கூறி இருந்தார். இதுதொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி கொள்ளையடிப்பவர்களை மீது லஞ்ச ஒழிப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உள்ளாட்சி நிர்வாகத்தை ஊழல் நாறும் நிர்வாகமாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாற்றிருக்கிறார் என்றார்.  

இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் இன்றே என் பதவியை ராஜினாமா செய்ய தயார் எனவும் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் வேலுமணி சார்பில் சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறாக பேசியுள்ளார். எனவே ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.