stalin pressmeet in TN assembly

பான் மசாலா குட்கா அதிபர்களிடம் ரூ.40 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர் விஜய பாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வெளிநடப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

பான் மசாலா குட்கா விவகாரம் தொடர்பாக, பேரவையில் பேச மறுக்கப்பட்டதாக கூறி திமுகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர். அப்போது, தமிழக அரசு ராஜினாமா செய்யக்கோரி திமுகவினர் கோஷம் எழுப்பினர். மேலும், தமிழக அரசும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். பின்னர், திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

குட்கா போதைப்பொருள் குறித்து அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்துள்ளோம். தடையை மீறி குட்கா விற்க ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெற்றவர்கள் பட்டியலில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பெயர் முதலிடத்தில் உள்ளது. முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், தற்போதைய டிஜிபி டி.கே. ராஜேந்திரனுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கடிதம் அனுப்பி 10 மாதங்கள் கடந்த பின்னும் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. லஞ்சம் பெற்ற காவல் அதிகாரி ஜார்ஜே, நடவடிக்கை எடுக்கக்கோரி நாடகம் ஒன்றை அரங்கேற்றினார். அவரே நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதம் எழுதினார். வருமான வரித்துறையிடம் சிக்கிய டைரியில் உள்ள பெயர்களை வெளியிடக் கோரினோம். ஆனால், பேச அனுமதி மறுக்கப்பட்டது.

அந்த டைரியில், யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. லஞ்சப் புகாரில் சிக்கிய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்க வேண்டும். 40 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்து குறித்த ஆவணங்கள் அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து வருமானவரித்துறை அதிகாரி, நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளார். 2016 இல் இருந்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தலைமைச் செயலரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

லஞ்ச புகார் குறித்து, நேற்று இந்து ஆங்கில பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வந்துள்ளது. அதில் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தனியார் ஆங்கில தொலைக்காட்சியில், பெயர்கள் தெளிவாக ஒளிபரப்பப்பட்டது.

ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி கொடுக்கப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறையினர் குறிப்பை கைப்பற்றியுள்ளனர். அதில் முதல் பெயர் எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ, அமைச்சர் தங்கமணி என வரிசையாக பெயர் இடம் பெற்றுள்ளது.