ஆளுநர்  வித்யாசாகர் ராவ் விரைவில் சட்டப்பேரவையை  கூட்டி ஜனநாயகத்தை பாதுகாப்பார்  என தான் நம்புவதாக  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதாகவும் கூறி ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தலைவர் கே. ஆர்.ராமசாமி ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதையே வலியுறுத்தியிருந்தார். ஆனால் இந்த கடிதங்கள் மீது ஆளுநர் தனது முடிவை தெரிவிக்கவில்லை. இது  தொடர்பாக ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தங்கள் வரர் தொடங்கின.

இதையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளார். திமுக முதன்மை செயலாளர் துரை முருகன் தலைமையில் , அவரை சந்திக்க தி.மு.க. நேரம் கேட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ,  ஆளுநர்  வித்யாசாகர் ராவ், சட்டப்பேரவயை கூட்டி ஜனநாயகத்தை காப்பார் என நம்புவதாக தெரிவித்தார்.

தற்போது ஆளுநரை சந்திக்க தி.மு.க. சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது என்றும் அவரை சந்திக்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோருவோம் என்றும் ஸ்டாலினி கூறினார்.

முதலமைச்சர்  மீது நம்பிக்கை இல்லை என 19 எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளதால்  அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்றும் இந்த ஆட்சி  பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத்  தொடர்ந்தால்  அது குறித்து கவலை இல்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.