கடற்கரையில் சாலையில் முக ஸ்டாலின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்து சாலையில் ஊர்வலமாக கோஷமிட்டபடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ள நிலையில் சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தலைமை செயலகம் வரும் வழியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு வாகனங்களை சோதனை செய்து அனுப்புகின்றனர்.

சட்டசபைக்குள் எம்எல்ஏக்கள் தவிர வேறு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. எம்எல்ஏக்களின் உதவியல்ர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
காங்கிரஸ் கொறடா விஜயதரணி உதவியாளரை தடுத்தபோது அவர் போலிசாரிடம் வாக்குவாதம் செய்து உள்ளே அழைத்து சென்றார்.
வழக்கமாக சட்டமன்றம் நடக்கும்போது பாரவையாளர் மாடத்தில் பொதுமக்கள் கட்சிகாரர்கள் அமர அனுமதிக்கப்படும். ஆனால் இன்று அனுமதி ரத்து செய்யப்பட்டது.

சட்டசபை காவலர்கள் எண்ணிக்கையும் 500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று காலை சட்டசபைக்கு தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் காரில் வந்தார்.
தலைமை அலுவலகத்துக்குள் அவரது காரை அனுமதிக்காமல் வேண்டுமென்றே போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தி காரை சோதனையிட்டனர்.
இதனால் கோபமடைந்த ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் காரையே இது போன்று வழியில் தடுத்து நிறுத்துகிறீர்களே காரை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று கூறினார். சாதாரணமாக அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கும்போது கேபினட் அந்தஸ்தில் உள்ள எதிர்கட்சி தலைவர் காரை சாலையிலேயே மறித்து சோதனையிடுவது முறையா? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் அவருடன் வந்த துரைமுருகன் பொன்முடி ஜெ.அன்பழகன் ஏ.வா.வேலு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சாலையில் இறங்கி கோஷமிட்டபடி சட்டசபை நோக்கி நடந்து சென்றனர்.
சுமார் 200 மீட்டர் தூரம் சாலையில் கோஷமிட்டபடி சென்ற ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் நடந்தே சட்டபடி உள்ளே சென்றனர்.இதனால் போலீசார் அதிர்ந்து போய் நின்றனர்.
ஸ்டாலின் திடீரென எம்எல்ஏக்களுடன் கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றது பரபரப்பை ஏற்பட்டது.
