சசிகலாவை வீரமங்கை என்று அமைச்சர் செல்லூர் ராஜு புகழ்ந்து பேசியதால் சட்டசபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் ஸ்டாலினுக்கும் சபாநாயகருக்குமான விவாதமாக அது முடிவடைந்தது.

சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கடந்த 27ஆம் தேதி கலந்து கொண்டு பேசிய அதிமுக எம்எல்ஏ ஒருவர் சசிகலாவை சின்னம்மா என்று கூறி புகழ்ந்து தள்ளினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய துரைமுருகன், "மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி உறுப்பினர்கள் பேசுகிறீர்கள் ஏற்றுகொள்கிறோம்.

ஆனால் "சின்னம்மா சின்னம்மா" என்று பேசுகிறீர்களே... அவர் யார்? இவ்வாறு பேசலாமா" என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், "அவர் தனது கட்சி தலைமையை குறிப்பிட்டு பேசுகிறார்.

 நீங்கள் எப்படி உங்கள் கட்சி தலைவரை புகழ்ந்து பேசுகிறீர்களோ அது போன்று அவர் தன கட்சி தலைவர் பற்றி பேசுகிறார் இதில் ஒன்றும் தவறில்லை.. அமருங்கள்" என்று விவாதத்தை முடித்து வைத்தார்.

இந்நிலையில் இன்று கேள்வி நேரத்தின் போது பதிலளித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு தனது பதில் உரையில் கழக பொது செயலாளர் சின்னம்மா, தமிழகத்தின் வீர மங்கை, எங்களுடைய ஆக்சிஜன் என்றெல்லாம் சின்னம்மா புகழ் பாடினார்.

இதை ஆட்சேபித்து எழுந்து பேசிய துரைமுருகன், "இதென்ன சட்டசபையா அல்லது கட்சிக்கூட்டமா? கட்சி கூட்டத்தில் பேசுவது போல் அமைச்சர் பேசிக்கொண்டிருக்கிறாரே??" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பேசிய தனபால் "அவர் தன் கட்சி தலைமையை புகழ்ந்து பேசுகிறார். நீங்கள் உங்கள் கட்சி தலைமையை பற்றி பலமுறை புகழ்ந்து பேசியுள்ளீர்கள்.ஏற்கனவே நான் இதற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.. நீங்கள் அமருங்கள்" என்று கூறினர்.

இதற்கு பதிலளித்து எழுந்து பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் , "அவை மரபுப்படி இது தவறு.. கேள்வி நேரத்தின் பொது உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசுவது மட்டுமே நடைமுறை" என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஓபிஎஸ் "உங்கள் திமுக ஆட்சியில் பலதடவை இதே போன்று புகழ்ந்து பேசியுள்ளீர்கள். அவையில் இல்லாதவர்களை கூட புகழ்ந்து பேசியுள்ளீர்கள்" என்று பதிலளித்தார்.

இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின் "நாங்கள் செய்தது தவறு என்றால் அதே தவறை நீங்களும் செய்வீர்களா? நாங்கள் இனி அதை செய்ய மாட்டோம் கேள்வி நேரத்தில் புகழ்ந்து பேசமாட்டோம் நீங்களும் புகழ்ந்து பேசாமல் இருப்பீர்களா?" என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம் கேள்வி நேரத்தில் கேள்வியை மட்டும் கேட்க வேண்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.

இதோடு விவாதம் முடிவுக்கு வந்தது.