திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. இளைஞர்கள் அனைவரும் வேலையில்லாமல் பசியிலும் பட்டுனியிலும் அவதிபட்டிருக்கிறார்கள்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மா.சுப்ரமணியனை ஆதரித்து சென்னை ஈக்காட்டு தாங்கலில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, வேட்பாளர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய கி.வீரமணி, இந்த தேர்தலில் வெற்றி பெற போவது ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிதான் என்றும், இந்த மண் பெரியார் மண், கலைஞர் மண், அண்ணா மண் ஆகையால் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றார்.

பத்து ஆண்டுகால ஆட்சியில் இதுபோன்ற ஒரு அடிமை ஆட்சியை நான் பார்த்தது இல்லை. இந்த ஆட்சியாளர்களை எப்போது வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் துடித்து கொண்டு இருக்கிறார்கள், இந்த அடிமை ஆட்சியால் அனைத்து துறையை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார். அண்ணா பேரில் கட்சி வைத்துக் கொண்டு வட நாட்டு அடிமையாக உள்ள அதிமுகவையும் தளபதி ஸ்டாலின்தான் மீட்டெடுப்பார் என்றும், டெல்லிக்கு அடிமை சாசனம் தான் அதிமுக எழுதி கொடுத்து உள்ளது என்றும் அவர் கூறினார். அறிவியல் ரீதியாகத்தான் கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி கைதட்ட சொல்கிறார், விளக்கு ஏத்த சொல்கிறார். கோரோனவை விட ஆபத்தானது வடக்கே இருந்து வரக்கூடிய வைரஸ்கள் ஆர்.எஸ்.எஸ்.மற்றும் பாஜக என்றும் அதற்கு தமிழகத்தில் உள்ள ஒரே தடுப்பூசி தளபதி தான் என்றார்.

திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. இளைஞர்கள் அனைவரும் வேலையில்லாமல் பசியிலும் பட்டுனியிலும் அவதிபட்டிருக்கிறார்கள். நம்மாளுடை கல்வி நாசப்படுத்தப்பட்டது இந்த ஆட்சியில் தான் என்றார். மதச்சார்பற்ற கூட்டணி தேர்தலுக்காக உருவான கூட்டணி இல்லை. போராட்ட களத்தில் உருவான கூட்டணி, போராடி போராடி இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது எங்கள் கூட்டணி. இந்த தேர்தலில் நாம் வாழ்வின் எதிர்காலம் உள்ளது. அதனால் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை தட்டி கேட்பவர் ஸ்டாலின் என்றும் பாஜகவின் எந்த வித்தையும் தமிழகத்தில் நடக்காது எனவும், முன்பு எல்லாம் வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும் ஆனால் இந்த ஆட்சியில் வெங்காயத்தை நினைத்தாலே கண்ணீர் வருகிறது, ஆக உதய சூரியன் உதிக்கும் நாள் நெருங்கி விட்டது என்றார்.
