காவல்துறை தொடர்ச்சியாக தலித் மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. காவல் துறை சில சமூகத்துடன் நெருக்கமாகவும், சில சமூகத்துடன் தள்ளியும் இருக்கின்றனர்.

காவல்துறை தொடர்ச்சியாக தலித் மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. காவல் துறை சில சமூகத்துடன் நெருக்கமாகவும், சில சமூகத்துடன் தள்ளியும் இருக்கின்றனர்.

சேலத்தில் விசிக கொடி ஏற்றுவதில் வெடித்த பிரச்சினை குறித்து ஸ்டாலினே சாமதானம் செய்த பின்னரும் விடாக்கொண்டனாக கொந்தளித்து தள்ளியிருக்கிறார் திருமாவளவன். சேலம் மாவட்டம் மோரூரில் சில நாட்களுக்கு முன்னர் வி.சி.க. கொடியை அக்கட்சி தொண்டர்கள் ஏற்ற முயன்றபோது பிரச்சினை வெடித்தது. விசிக கொடிக்கம்பத்தை அகற்றிய போலீஸ் மீது தொண்டர்கள் கல்வீச்சு நடத்தியதால் அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன், சென்னை, சேலம், உள்ளிட்ட ஊர்களில் போராட்டத்தையும் அறிவித்தார். இரு தினங்களுக்கு முன்னர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டணியில் இருந்துகொண்டே எதிர்ப்பு போராட்டம் நடத்தும் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அழைத்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், காவல்துறை செயல்பாடு குறித்து முதல்வரிடம் தெரிவித்ததாக கூறினார். மோரூரில் விசிக கொடியை ஏற்ற பிற கட்சிகள், சமூகத்தவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் போலீஸ் நடவடிக்கையால் தான் கலவரம் மூண்டதாக திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும், காவல்துறை தொடர்ச்சியாக தலித் சமூகத்திற்கு எதிராக செயல்படுகிறது. ஒரு சில சமூகத்தினரோடு நெருக்கம் காட்டும் காவல் துறை, தலித்துகளை தள்ளி வைத்து பார்க்கிறது. விசிக நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. இது கடந்த ஆட்சியிலும் நடைபெற்றது. தற்போது காவல் துறை குறித்த முறையீட்டை கவனமாக கேட்டுக்கொண்ட ஸ்டாலின், இப்பிரச்சினையை கவனத்தில் கொள்வதாக கூறினார். ஆகவே விசிக அறிவித்த போராட்டங்களுக்கு இனி அவசியம் இருக்காது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.