கொங்குமண்டலத்தில் அ.தி.மு.கவை டேமேஜ் செய்ய நடவடிக்கைகளை எடுக்க ஸ்டாலின் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க வெற்றி பெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.கவின் செல்வாக்கை ஒன்றும் செய்ய முடியவில்லை. நாடாளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தலாக இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் மட்டும் தி.மு.கவால் பெரிய அளவில் வெற்றிகளை குவிக்க முடியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட கொங்குமண்டலத்தில் கணிசமான தொகுதிகளை வென்று இருந்தால் தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்க முடியும். ஆனால் கொங்கு மண்டலம் தொடர்ந்து அ.தி.மு.க கோட்டையாக இருந்து வருகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், எப்போது வேண்டுமானாலும் சட்டமன்ற தேர்தல் என்கிற நிலையில் வெற்றிக்கான பல வியூகங்களை ஸ்டாலின் டீம் வகுத்து வருகிறது. அதில் முதல் வியூகம் கொங்குமண்டலத்தில் அ.தி.மு.கவை டேமேஜ் செய்ய வேண்டும் என்பது தான். கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.கவின் வாக்கு வங்கியை சரித்துவிட்டால் தேர்தலில் வெற்றி எளிதாகும் என்று தி.மு.க கணக்கு போடுகிறது.

அ.தி.மு.க இமேஜை கொங்குமண்டலத்தில் டேமேஜ் செய்ய வேண்டும் என்றால் அங்கு அந்த கட்சியின் நிர்வாகிகளாக இருப்பவர்களை டேமேஜ் செய்ய வேண்டும் என்பது தான் இலக்கு. அந்த வகையில் தான் ஆப்பரேசன் வேலுமணி என்கிற வியூகத்தை தி.மு.க முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு அம்சமாகவே கடந்த வாரம் எஸ்.பி.வேலுமணி தனது உறவினர்களுக்கு டெண்டல்களை கொடுத்துள்ளதாக கூறி ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகின.
உறவினர்களுக்கு அமைச்சர் டெண்டர் வழங்க பரிந்துரை செய்யக்கூடாது என்பது தான் விதி. ஆனால் அமைச்சரின் உறவினராக இருப்பதால் ஒருவர் அரசாங்க டெண்டரே எடுக்க கூடாது என்று எந்த விதியும் இல்லை. அதே சமயம் அந்த ஆங்கில தொலைக்காட்சியில் விதிகளை மீறி அமைச்சர் வேலுமணி தனது உறவினர்களுக்கு டெண்டர்களை கொடுத்தாரா என்பதற்கு ஆதாரமாக எதையும் கொடுக்கவில்லை. ஆனாலும் செய்தி தொடர்ந்து அமைச்சர் வேலுமணியை டேமேஜ் செய்யும் வகையிலேயே ஒளிபரப்பானது.

