நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடைபெற்ற 18 சட்டப்பேரவைத் தொகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்த முடியாத நிலையில் இருந்த திமுக, மே 19-ஆம் தேதி நடைபெற உள்ள 4 சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுகளை அள்ள புதிய பாணி பிரசாரத்தை திமுக வகுத்துள்ளது.
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு  திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன்; அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி; சூலுாரில் பொங்கலுார் பழனிசாமி; ஒட்டப்பிடாரத்தில் சண்முகையா ஆகியோர் திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களையும் திமுக அறிவித்து பணிகளைத் தொடங்கிவிட்டது. கட்சியில் உள்ள 65 மாவட்ட செயலர்கள், 50 எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழுவில் இடம்பிடித்துள்ளனர். முதல் கட்டமாக  மே 1 முதல் 8-ஆம் தேதி வரை நான்கு தொகுதிகளிலும் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் என்பதால் திமுக கூடுதல் கவனம் செலுத்திவருகிறது. 21 தொகுதிகளில் வெற்றி பெற்றால், திமுக ஆட்சியமைக்க வாய்ப்புண்டு. அது நடக்காமல் போனாலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், அதிமுக ஆட்சியைத் தொடர முடியாத நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக இந்த 4 இடைத்தேர்தலிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.

 
எனவே ஓட்டுகளைக் கணிசமாக பெறும் வகையில் இந்த 4 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை திமுக தலைமை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திமுகவின் மேல்மட்ட நிர்வாகிகள் முதல், கீழ் மட்ட நிர்வாகிகள் வரை அனைவரையும் ஒருங்கிணைக்கும் புதிய ‘நுண் மேலாண்மை’ என்ற திட்டத்தை திமுக ஏற்படுத்தியுள்ளது. எல்லோரும் ஒரே குடையின் கீழ் ஒவ்வொரு தொகுதியிலும் பிரசாரம் மேற்கொண்டு வாக்களர்களின் ஓட்டுகளைப் பெற இந்தத் திட்டத்தை திமுக கையில் எடுத்துள்ளது.

 
ஆளுங்கட்சிக்கு இணையாக தேர்தல் செலவு செய்யவும், அவர்கள் பாணியில் பிரசாரம் மேற்கொள்ளவும் இதன்மூலம் திமுக திட்டமிட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் சுணக்கமாக இருந்து கோட்டைவிட்டுக்கூடாது என்பதற்காக திமுக தலைமை ஒருங்கிணைப்பு திட்டத்தை முன்வைத்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மிக மெத்தனமாக இருந்து டெபாசிட் காலியானதைப் போல நடக்காமல் இருக்க கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

 
திமுகவின் இந்த ஒருங்கிணைப்பின்படி ஒரு மாவட்ட செயலாளர் ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 முதல் 1500 வாக்குகளைத் திரட்ட வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு ஒன்றிய செயலர்கள், நகர செயலர்கள், பகுதி செயலர்கள் ஆகியோர் பக்கபலமாக இருப்பார்கள். இவர்களின் கீழ் பணியாற்றும் கீழ்மட்ட நிர்வாகிகளான வட்டச் செயலாளர், கிளைச் செயலாளர் ஆகியோர் 200 ஓட்டுகள்வரை திரட்ட வேண்டும் என்று அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கீழ்மட்ட நிர்வாகிகள் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்காளர்களை ஈர்க்க வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.