ஐந்து ஆண்டு கால வேதனையின் தொடர்ச்சியாக ஓராண்டு கால சோதனையை மக்கள் அனுபவிக்கிறார்கள் என்றும் வேதனை மிகுந்த இந்த ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், அதிமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவு என்பது ஊழல், வேதனை மிகுந்த சாதனையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு முதல் 2106 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு கால வேதனையின் தொடர்ச்சியாக கடந்த ஓராண்டு கால சோதனையை மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என ஸ்டாலின குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 5 லட்சம் கோடி கடனுடன் அரசு கஜானா காலியாக இருப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், கஜானாவை காலி செய்தது ஒன்றே இவர்களின் சாதனை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வேதனை மிகுந்த இந்த அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும் என்றும், 6 ஆண்டுகளாக இருள் சூழ்ந்த தமிழகத்தில் சூரிய கதிர்கள் நிச்சயம் வெளிச்சத்தைத் பரப்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சூரியன் வெளிச்சத்தைத் தரும் என்றும், தமிழக மக்களுடன் இணைந்த நின்று திமுக எத்திக்கிலும் வெற்றி பெறும் என்றும் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் தெரிவித்துள்ளார்.