திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சற்று நேரத்திற்கு முன்பாக விசாரித்து விட்டு சென்ற நிலையில் தற்போது ஸ்டாலின் மற்றும் கனிமொழி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றனர். அதன் பிறகு துரைமுருகன், ஆ.ராசா, வேலு,நேரு, பெரியசாமி உள்ளிட்டோரும் திமுக எம்.எல்.ஏ.,க்களும் மருத்துவமனையை விட்டு கிளம்பி சென்றனர்.

வயது முதிர்வின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை பொறுத்தே கணிக்க முடியும். முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. மருத்துவ உபகரணங்கள் உதவிகளுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து கருணாநிதியை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதனை அறிந்த தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். இதனால் மருத்துவமனை முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.