தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் அந்த ரணத்தை பகிர்ந்துள்ளனர். 

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ‘’மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல  காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது’’எனத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இந்த ஆட்சியாளர்கள் கொள்ளையுடன் கொலைகளையும் கூசாமல் செய்பவர்கள் என்று நிரூபித்த நாள் இன்று! மே 22. தென்பாண்டி கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது! அதிமுகவின் ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது’’எனத் தெரிவித்துள்ளார்.

 

திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி, ‘’தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. 'கலவரத்தைக் கட்டுப்படுத்த' எனும் பொய்யைக் கட்டவிழ்த்து, போராடிய மக்களின் உயிர்குடித்தது அரசு பயங்கரவாதம். துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா ? இல்லை. மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம். தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம்’’எனத் தெரிவித்துள்ளார்.