அரியலூர்
 
காவிரி பிரச்சனையில் ஆளுங்கட்சி செய்ய வேண்டியதையெல்லாம் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்து வருகிறார் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகத்தின் உரிமையை பறிக்கும் விதமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தவறிய மாநில அரசைக் கண்டித்தும் தி.மு.க மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இரயில் மறியல், சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்த 5-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு விவசாயிகள், மக்களை சந்திக்கும் பொருட்டு “காவிரி உரிமை மீட்பு பயணத்தை” தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ஆம் தேதி திருச்சி முக்கொம்பில் தொடங்கி தஞ்சை உள்ளிட்ட ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே அரியலூரில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தின் மற்றொரு குழுவானது தனது பயணத்தை தொடங்குவதற்கான பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. 

இந்த கூட்டத்துக்காக அரியலூர் அண்ணா சிலை அருகே மேடை அமைக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி நடை பயணத்தை தொடங்கி வைத்தார். 

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க. துணை பொதுச்செலாளர்கள் துரைசாமி, பெரியசாமி, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் வீரபாண்டியன், 

மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது, ம.தி.மு.க. உயர்மட்ட குழு உறுப்பினர் சின்னப்பா, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், முஸ்லீம் லீக் கட்சி மாநில செயலாளர் ஷாஜகான் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, "காவிரி பிரச்சனை என்பது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமானதல்ல. அது தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனை. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நடைமுறைப்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது ஏமாற்றம் அளிக்கிறது. இதில் மாநில அரசானது மெத்தன போக்குடன் செயல்பட்டு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தவறிவிட்டது. நாடாளுமன்ற எம்.பி.க்கள் மக்களுக்கு குரல் கொடுக்காமல் பதவியை காப்பாற்றி கொள்வதிலேயே குறியாக இருக்கின்றனர்.

நீட் பிரச்சனையில் மத்திய - மாநில அரசுகள் துரோகம் இழைத்ததால்தான் அனிதாவை இழந்தோம் என்பதை மறுக்க முடியாது. இதனால்தான் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆளுங்கட்சி செய்ய வேண்டியதையெல்லாம் அவர் செய்து வருகிறார். தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் உச்சநீதிமன்றத்தையே திசைதிருப்பும் வகையில், மோடி அரசு செயல்படுகிறது. அதனால் தான் ஆறு வாரங்கள் கெடு முடிந்ததும் "ஸ்கீம்"என்றால் என்ன? என கேள்வி எழுப்பி கூடுதல் அவகாசம் கேட்டிருக்கின்றனர்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சனையில் வரைவு செயல்திட்ட அறிக்கையை மே மாதம் 3-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க தற்போது உத்தரவிட்டிருக்கிறது. இது தீர்க்கமான முடிவு அல்ல. இதுவும் காலதாமதம் செய்வதற்கான வழியே ஆகும். 

இனி காவிரி பிரச்சனையில் மக்களை தவிர வேறு யாரையும் நம்ப வேண்டாம். மக்களின் கிளர்ச்சியே தமிழக உரிமையை காப்பதற்கு வழிவகுக்கும். அந்த வகையில், வருகிற 12-ஆம் தேதி தமிழகம் வரும் மோடிக்கு எதிராக அனைவரும் வீடுகளில் கருப்பு கொடியேற்ற வேண்டும். கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இதையொட்டி காவிரி மீட்பு பயணத்தில் பங்கேற்று உரிமையை மீட்டெடுப்போம்" என்று அவர் பேசினார்.

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் மற்றொரு குழுவானது தனது பயணத்தை அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர், திருமானூர், பாபநாசம், திருவையாறு, கும்பகோணம் வழியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கி மேற்கொள்ள இருக்கின்றனர். 

முடிவில் கடலூர் மாவட்டம் சிதரம்பரத்திற்கு செல்லும் இந்த குழுவானது, மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற குழுவினருடன் இணைந்து செல்கிறார்கள். பின்னர் 12-ஆம் தேதி கடலூரில் காவிரி உரிமை மீட்பு பயண நிறைவு பொதுக்கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.