தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தேர்தலை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் சதி செய்து வருவதாக குற்றம்சாட்டிய  ஸ்டாலின், இது போன்ற நடவடிக்கையை  திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என எச்சரித்துள்ளார். 

கோவை கொடீசியா வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர். நடராஜனுக்கு ஆதரவான பிரம்மாண்டமான பிரச்சார கூட்டம் இன்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கே.பாலாகிருஷ்ணன், காதர் மொய்தீன், வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின் , இங்கே கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து பொதுக்கூட்டமா அல்லது வெற்றிவிழாக் கூட்டமா என்கிற அளவுக்கு மக்கள் திரண்டு உள்ளார்கள். அதிமுக-பாஜக-பாமக கூட்டணி கொள்கைக்கான கூட்டணி அல்ல. கொள்ளைக்கான கூட்டணி என கிண்டல் செய்தார்.

யாருடைய வீட்டிலோ பணத்தை எடுத்துவிட்டு, துரைமுருகன் வீட்டில் எடுத்ததாக பொய்யான தகவலை அதிமுக மற்றும் பாஜக பரப்பி வருகிறார்கள். திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தேர்தலை நிறுத்த சதி நடந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி அதிமுக சூழ்ச்சிகளை செய்து வருகிறது என குற்றம்சாட்டினார்.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் உள்பட 3 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு உள்ளது. ஆனால் தேர்தல் நடத்த தடையில்லை.. ஏன் தேர்தல் நடத்தப்பபடவில்லை. அங்கு தான் சூட்சமம் இருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்தார்.

அண்மையில் சூலூர் தொகுதி எம்எல்ஏ மரணமடைந்தார். அதையும் சேர்த்து 4 தொகுதிகளையும் சேர்த்து 22 தொகுதிகளில் தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். 


22 தொகுதிகளில் தேர்தலை நடத்தினால், அந்த 22 தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றுவிட்டால், மெஜாரிட்டியாக திமுக வந்துவிடும். 

இதனால் இப்போது ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக ஆட்சியில் இருந்து கவிழக்கூடிய சூழல் வந்துவிடும். இதெல்லாம் திட்டம்போட்டுத்தான் தேர்தல் கமிஷனை பயன்படுத்தி தேர்தலை நிறுத்தும் சூட்சமங்களை அதிமுக அரசு செய்து கொண்டு இருக்கிறது என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.