அதிமுக ஆட்சிக்கெதிரான திமுகவின் அதிரடியை பொறுத்திருந்து பாருங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23ம் தேதி எண்ணி முடிக்கப்பட்டது. அதில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் திமுக எம்எல்ஏக்கள் 13 பேர், சபாநாயகர் முன்பு உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர். சட்டப்பேரவையில் திமுகவுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில் தற்போது 101-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியின் முன்னணி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘சட்டமன்றம் கூடும்போது நாங்கள் எப்படி செயல்பட போகிறோம் என்பதை நீங்கள் நேரடியாக பார்க்க உள்ளீர்கள்’’ என்றார். அப்போது, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ’’வெயிட் அண்ட் ஸி, திமுகவின் அதிரடியை பொறுத்திருந்து பாருங்கள். சட்டமன்ற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, அறிவித்ததும் அதுகுறித்து நாங்கள் முடிவெடுப்போம்’’ என்று அவர் கூறினார். வெயிட் அண்ட் ஸி என ஸ்டாலின் கூறியிருப்பது அதிமுக ஆட்சிக்கெதிரானதாக இருக்குமா என பல்வேறு யூகங்களை கிளப்பி இருக்கிறது.ஸ்டாலின்  கூறிய இந்த ஒற்றை வார்த்தை அதிமுக ஆட்சியாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.