திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அவர் அடித்த சிக்ஸரில் அழகிரி அம்பேலாகி விட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அழகிரி கடைசியில் சரண்டர் ஆனாலும் திமுக அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. 5 ஆம் தேதி சென்னையில் பேரணி நடக்குமா? என்ற கேள்விக்குறியுடன் தற்போது நிலைமை உள்ளது.

இந்நிலையில் தான் திமுக மகளிரணித் தலைவராக உள்ள கனிமொழியையும் ஓரங்கட்டும் முயற்சிகள் தற்போது ஜரூராக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக பொதுக்குழுவில் பேசிய கனிமொழி முன்னாள் பொருளாளர் போல் இல்லாமல், புதிய பொருளாளர் துரை முருகன், மகளிரணிக்கு தாராளமாய் பொருள் கொடுத்து உதவ வேண்டும் என பஞ்ச் வைத்தார். அப்போதே ஸ்டாலினின் முகம் கடுமையானதை தொண்டர்கள் பார்த்தனர்.

தொடர்ந்து பேசிய அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எல்லாம் தலைவர்கள் அல்ல என்றும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே உண்மையான தலைவர் எனவும் குறிப்பிட்டார். இந்த பேச்சு ஸ்டாலினை சுற்றி இருப்பவர்களை சற்று யோசிக்க வைத்துள்ளது.

ஸ்டாலினுடன் கனிமொழி எப்போதுமே இணக்கமாகத்தான் இருந்து வருகிறார். ஸ்டாலினுக்காக அவர் தனது அண்ணன் அழகிரியையும் பகைத்துக் கொண்டார். ஆனாலும் சந்தேகம் இருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை ஸ்டாலின் தரப்பினர் உறுதியாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

அதன் ஒரு படியாகத்தான் தற்போது கனிமொழியை கழற்றிவிடும் பணியில் சீக்ரெட்டாக இறங்கியுள்ளது ஸ்டாலினின் கிச்சன் கேபினட்  என்கிறது திமுக வட்டாரம். தற்போது மகளிரணி தலைவராக உள்ள கனிமொழி தமிழ்நாடு முழுதும் சுற்றுப்  பயணம் செய்து தனக்கென ஒரு லாபியை உருவாக்கி வருவதாக திமுக தலைமை நினைக்கிறது.

தற்போது அந்தப் பதவிக்கு ஆப்பு வைக்க நினைக்கிறது ஸ்டாலின் தரப்பு என்கின்றனர். அதற்குப் பதிலாக கனிமொழிக்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் என்ற டம்மி பதவியை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கியத்துவம் இல்லாத அந்த பதவியை கனிமொழிக்கு அளிப்பதன் மூலம் அவரது அதிகாரங்களை குறைக்க முடியும் என எதிர்தரப்பு நினைக்கிறது. பொதுக்குழு கூட்டம் நடப்பதற்கு முன்பு டெல்லி விவகாரங்களை கனிமொழியே பார்த்துக் கொள்ளட்டும் என ஸ்டாலின் முடிவு செய்திருந்ததாக தகவல் வந்தது. ஆனால் கனிமொழியின் பொதுக்குழு  பேச்சு இதற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டதாக  தெரிகிறது.

இந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் கனிமொழி கனிமொழியாக இருப்பாரா அல்லது கன்மொழியாக மாறுவரா? என்பது போகப் போக தெரியும்.