வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தால் நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்து என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை அந்த நிறுவனத்தின் நிறுவனர் வைகுண்டராஜனை அதிர வைத்துள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது வைகுண்டராஜனுடன் நல்ல அன்டர்ஸ்டேன்டிங்கில் இருந்த ஸ்டாலின் திடீரென அவர்களுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருப்பது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட தி.மு.கவினரையே அதிர வைத்துள்ளது.

ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கோடி மெட்ரிக் டன் தாதுமணல் 52 தாதுமணல் குவாரிகளில் இருந்து அள்ளிச்செல்லப்பட்டுள்ளதாக” சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் மோனோசைட்டில் (அணுசக்தி கழகங்களில் பயன்படுவது) தனியாருக்கு உரிமம் அளிக்கப்படக்கூடாது; ஆனால், 9 மோனோசைட் குவாரிகள் குத்தகை தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன;

 “9 மோனோசைட் குவாரிகளில் எடுக்கப்பட்ட மோனோசைட் அளவு, அது எப்படி பிரித்தெடுக்கப்பட்டது, அதன் கையிருப்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட எந்த விவரங்களும் குத்தகைதாரர்களிடம் இல்லை. இந்த முறைகேடு தொடர்பான ககன்தீப் சிங் பேடி குழுவின் விசாரணையை முடக்கவும், திரு ககன் தீப் சிங் பேடியை நீக்கவும் “வி.வி. மினரல்ஸ் நிறுவனமும்”, அ.தி.மு.க அரசும் இணைந்து எடுத்த முயற்சிகளை சென்னை உயர்நீதிமன்றம் முறியடித்தது.

குறிப்பாக முதலமைச்சராக இருந்த திரு ஓ. பன்னீர்செல்வமும், தற்போது முதலமைச்சராக இருக்கும் திரு எடப்பாடி பழனிசாமியும் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் “முதன்மைக் காவலாளிகளாக” நின்றார்கள்; இன்றும் நிற்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த விசாரணை அறிக்கையை வெளியிட விடாமல் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் எடுத்த முயற்சிகளுக்கு எல்லாம் அ.தி.மு.க அரசு துணை போனது. அ.தி.மு.க அரசும், வி.வி.மினரல்ஸ் நிறுவனமும் கூட்டுச் சதி செய்து இந்த தாதுமணல் முறைகேட்டை எவ்வாறு மூடி மறைத்திருக்கிறார்கள் என்பது சிறப்பு விசாரணைக்குழுவின் முழு அறிக்கையிலும் அடங்கியுள்ளது.

 மோனோசைட் விற்பனை, ஏற்றுமதி உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பிற்கு விரோதமான முறைகேடுகள் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். தாதுமணல் குவாரிகளால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஏற்பட்ட சுற்றுப்புறச் சூழல் தீமைகளுக்கு சம்பந்தப்பட்ட வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து அபாரதம் வசூலிக்க வேண்டும்.  நாட்டின் பாதுகாப்பிற்கே பேராபத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்கள் நடத்தியுள்ள மோனோசைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து மத்திய அரசே நேரடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக மீண்டும் தாதுமணல் குவாரிகளை அனுமதிக்க  முதலமைச்சர் திரைமறைவில் பேரம் பேசிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. எக்காரணம் கொண்டும் தாதுமணல் குவாரிகளைத் திறக்க மீண்டும் அனுமதி வழங்கக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது வைகுண்டராஜனின் மகன் சுப்ரமணியம் நடத்தும் நியுஸ் 7 தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று சொல்லப்பட்டது. ஜெயலலிதாவை நேரடியாக பகைத்துக் கொள்ளும் அளவிற்கு தி.மு.கவுடன் அப்போது வைகுண்டராஜன் நெருக்கம் காட்டினார். ஆனால் தேர்தலில் தி.மு.க தோல்வி அடைந்த பிறகு ஸ்டாலின் – வைகுண்டராஜன் இடையிலான நெருக்கம் குறைந்தது. அதிலும் அ.தி.மு.க சசிகலா குடும்பத்தின் வசம் சென்றதும், வைகுண்டராஜன் முழுக்க முழுக்க தினகரன் ஆதரவாளர் போல் செயல்பட ஆரம்பித்தார்.

ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் தினகரனுக்கு வைகுண்டராஜன் தரப்பில் இருந்து எக்கச்சக்க ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. மேலும் தினகரனை ஒரு ஹீரோ போல நியுஸ் 7 தொலைக்காட்சி புரமோட் செய்தது. இதனால் வைகுண்டராஜன் மேல் ஸ்டாலினுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் – பா.ஜ.க மேலிடத்திற்கும் கூட வைகுண்டராஜன் பாலம் போல் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இதற்கு பிரதிபலனாகவே கடந்த 4 ஆண்டுகளாக தடைபட்டுள்ள தாது மணல் குவாரிகளுக்கு மீண்டும் அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் நியுஸ் 7 தொலைக்காட்சியில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவத்தை குறைத்து கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. இதனால் தான் வைகுண்டராஜனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் யாரும் எதிர்பாராதவிதமாக அதிரடியாக ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.