ரஷ்யா சுற்றுப் பயணம் சென்றிருந்தபோதும் ஸ்டாலின் என்ற பெயரால் பல சங்கடங்களை அனுபவித்தேன், ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களை அனுபவித்ததாக  கல்யாண விழா ஒன்றில் விளக்கமாக கூறியுள்ளார்.

திமுக மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தில்லை கதிரவன் இல்லத் திருமண நிகழ்வு இன்று சென்னை அண்ணா நகரிலுள்ள விஜய் ஸ்ரீ மஹாலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது பேசிய ஸ்டாலின்; இன்றைய காலகட்டத்தில் தமிழுக்கு சோதனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இனிமேலாவது நமது குழந்தைகளுக்கு, இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும்.

அப்படியென்றால் உங்க பெயர் தமிழ்ப் பெயரா? என்று நீங்க கேட்கலாம். கலைஞருக்கு கம்யூனிச கொள்கைகள் மீது இருந்த ஈர்ப்பால் எனக்கு கம்யூனிஸ தலைவர் ஸ்டாலின் பெயர் வைத்தார். எனது மூத்த அண்ணன் மு.க.முத்துவுக்கு தனது தந்தை முத்துவேலரின் நினைவாக அந்த பெயரை கலைஞர் வைத்தார். 

அதேபோல எனது இரண்டாவது அண்ணனுக்கு பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நினைவாக அழகிரி என்று பெயர் சூட்டினார். அதே போல எனது தம்பிக்கு தமிழரசு என்றும், எனது தங்கைகளுக்கு தமிழ்ச்செல்வி, கனிமொழி என தமிழ்ப் பெயர்களையே வைத்தார். அவரது பேரப்பிள்ளைகள், எனது பேரப்பிள்ளைகள் என  அனைவருக்கும் தமிழ்ப் பெயர் தான். ஸ்டாலின் என்ற பெயர் வைத்ததால் நான் பல சங்கடங்களை அனுபவித்துள்ளேன். 

சென்னையிலுள்ள பள்ளியில் சேர்ப்பதற்காக போன போது என்னுடைய ஸ்டாலின் என்னும் பெயரை மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், கலைஞரோ, பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர என் மகனின் பெயரை மாற்ற மாட்டேன் என சொல்லிவிட்டார். அதுபோலவே ரஷ்யா சுற்றுப் பயணம் சென்றிருந்தபோதும் ஸ்டாலின் என்ற பெயரால் பல சங்கடங்களை அனுபவித்தேன் என்று உருக்கமாக விளக்கினார்.