ஈரோட்டில் நாளையும் நாளை மறுநாளும் திமுக மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, நீலகிரி, கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் கலந்துகொள்கின்றனர்.

வயது முதிர்வால் அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வு பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதி, இந்த மாநாட்டில் கலந்துகொள்வாரா? என்பது திமுக தொண்டர்களின் பிரதான கேள்வியாக உள்ளது.

இந்நிலையில், கருணாநிதி இந்த மாநாட்டில் கலந்துகொள்வாரா? என்பது தொடர்பாகவும் மாநாடு தொடர்பாகவும் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஈரோட்டில் நடக்கும் திமுக மண்டல மாநாடு, மாநில மாநாட்டையே மிஞ்சும் அளவிற்கு இருக்கும். காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கும் விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.

மேலும் ஈரோட்டில் நடக்கும் திமுக மண்டல மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்ள வாய்ப்பில்லை என தெரிவித்தார்.