Asianet News TamilAsianet News Tamil

குட்கா ஊழல்.. அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

stalin emphasis that minister vijayabaskar and dgp rajendran should resign
stalin emphasis that minister vijayabaskar and dgp rajendran should resign
Author
First Published Jan 12, 2018, 12:07 PM IST


குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது முதல்வர் அவரை பதவிநீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றதை அடுத்து, குட்கா கிடங்கு ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஒரு டைரி சிக்கியதாகவும் அதில், குட்காவை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கும் சென்னையில் செயல்பட்டு வந்த குட்கா நிறுவனம் லஞ்சம் கொடுத்தது தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.

குட்கா ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளையின் உத்தரவின் பேரில், இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரியாக ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார். அவர் நேர்மையாக வழக்கை விசாரித்து வந்த நிலையில், அவர் மாற்றப்பட்டுள்ளார். இதை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டமன்றத்தில் குட்கா ஊழல் குறித்து பேச ஸ்டாலின் முற்பட்டபோது, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதுகுறித்து பேசக்கூடாது என சபாநாயகர், ஸ்டாலினுக்கு அனுமதி மறுத்துவிட்டார். 

அதனால் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், குட்கா ஊழல் விவகாரத்தில், சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சரும் காவல்துறை டிஜிபியும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவர்களை முதல்வர் பதவிநீக்க வேண்டும் என வலியுறுத்த முற்பட்டேன். ஆனால் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறி சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். அதனால் வெளிநடப்பு செய்தோம் என ஸ்டாலின் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios