அநியாயத்திற்காக கர்நாடக அரசியல் கட்சிகள் ஒன்றிணையும்போது, நியாயத்திற்காக தமிழக அரசியல் கட்சிகளும் கண்டிப்பாக ஒன்றுகூட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் அலுவலகத்திலிருந்து இதுவரை நேரம் ஒதுக்கப்படாததால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தலைமை செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் மறுப்பது, தமிழகத்தையே அவமதிக்கும் செயல். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை என்றால், தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி எம்பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

மேலும் கர்நாடக அரசு சார்பில் வரும் 7ம் தேதி நடக்க இருக்கும் அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என அநியாயத்திற்காக கர்நாடக அரசியல் கட்சிகள் ஒன்றுசேரும்போது, நியாயத்திற்காக நாமும் ஒன்றுசேரவேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.